பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2013

சொத்து குவிப்பு வழக்கு: 2 வாரத்திற்குள் பதில் அளிக்க ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் புதிய நீதிபதி நியமனம் குறித்த கர்நாடக அரசின் மனு குறித்து இரண்டு வாரத்திற்குள் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனைத்தொடர்ந்து, புதிய நீதிபதி நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்காதது குறித்தும், எந்த அடிப்படையில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டார் என்பது பற்றியும் கர்நாடக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 
அதன் அடிப்படையில், நீதிபதி நியமனத்தில் விதிமீறல் எதுவும் இல்லை என்று கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிபதிகள் பி.எஸ்.சௌவுகான் மற்றும் பாப்டே ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது கர்நாடக அரசு சார்பில ஆஜரான வழக்கறிஞர், பணியில் தொடர விரும்பவில்லை என்று நீதிபதி பாலகிருஷ்ணா கூறினார். அதன் காரணமாகவே புதிய நீதிபதி நியமிக்கப்பட்டார் என்றும், புதிய நீதிபதி முறைப்படி விதிகளுக்கு உட்பட்டுத்தான் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்தார். 
இதையடுத்து கர்நாடக அரசு பதில் மனுவுக்கு இரண்டு வாரத்திற்குள் ஜெயலலிதா பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.