பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2013

வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்களுக்கு புதிய நிபந்தனை

தேசிய தகவல் மையத்தின் அதிகாரியும், வெளிநாட்டினர் இந்தியாவில் குடியேறுதலுக்கான விசா வழங்குதல் பதிவு மற்றும் தொடர்ந்து கண்காணிக்கும் துறை அதிகாரி எஸ்.ஏ.விஜயகுமார் கூறினார்.

 வெளிநாட்டவர் தங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து ஹோட்டல் நிர்வாகிகள், கல்வி நிறுவன  அதிகாரிகள் ஆகியோர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
 வெளிநாட்டவர்கள் இந்தியாவில் குடியேறுவதற்கான விசா வழங்கும் இணையமானது 167 நாடுகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்தியாவுக்கு வெளிநாட்டவர் ஒருவர் விசா கேட்டு விண்ணப்பம் செய்யும்போதே அவருடைய விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்படும். எனவே அவர் வருவதற்கான காரணம் தெரிந்து கொள்ள முடியும்.
 இந்தியாவுக்குள் வரும் அவர் விமானநிலையத்தில் இருந்து ஏதேனும் விடுதி அல்லது ஓட்டல்களில் தங்குவார். அப்படி ஓட்டல்களில் தங்கும்போது, அவரைப்பற்றிய விவரங்களை ஓட்டல் நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.இதற்காக படிவம் சி உள்ளது.
 இதுவரை இந்த படிவத்தை ஓட்டல் நிர்வாகத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்து வந்தனர். இனிமேல் அவர்கள் அப்படி செய்ய வேண்டியது இல்லை. ஆன்லைனில் படிவம் சி யை பெற்று அதிலேயே தகவல் தெரிவிக்கலாம்.
  இதுபோல் வெளிநாடுகளில் இருந்து படிப்பதற்காக ஏராளமான மாணவர்கள் வருகின்றனர். அவர்கள் தங்கள் கல்வி காலம் முடிந்த பின்னரும் தோல்வி அடைந்த பாடங்களை எழுத என்று கூறி இங்கேயே தங்கி விடுகின்றனர். இவர்களைப்பற்றி கல்வி நிறுவனத்தினர் தெரிவிக்க வேண்டும். இதற்கு ஆன் லைனில் படிவம் எஸ் பெற்று தகவல் தெரிவிக்க வேண்டும்.
 இதுமட்டுமின்றி சுற்றுலாவுக்கு என்று வரும் பல பயணிகள் தெரிந்தவர்கள் வீடுகளில் தங்குகின்றனர். அப்படி தங்கும்போது, வெளிநாட்டினருக்கு தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள் படிவம் சி மூலம் கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
 அப்படி உரிய முறையில் தகவல் தெரிவிக்கவில்லை என்றால், சட்டப்படி அது குற்றமாகும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
 நிகழ்ச்சியின் போது படிவம் சி மற்றும் படிவம் எஸ் பதிவு செய்வது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, கூடுதல் கண்காணிப்பாளர் குணசேகரன், ஈரோடு நகர டி.எஸ்.பி. பெரியய்யா, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி சூரியகலா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் நமச் சிவாயம், இன்ஸ்பெக்டர்கள் சுப்புரத்தினம், ஆறுச்சாமி, தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணன், சப்இன்ஸ்பெக்டர் வினதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.