பக்கங்கள்

பக்கங்கள்

11 நவ., 2013

கொமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்பு! தமிழக சட்டப்பேரவை நாளை அவசரமாக கூடுகிறது!
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை மாலை அவசரமாக கூடுகிறது.
இலங்கையில் வரும் 15ம் தேதி கொமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.
இதனிடையே, இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 24ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்றும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார் என்று அண்மையில் மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று பேரவை செயலாளர் ஜமாலுதின் இன்று அறிவித்துள்ளார். அவசரமாக கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.