பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2013

முத்தையா முரளிதரனுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்வதற்கு தயார்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை
பிரித்தானிய பிரதம மந்திரி டேவின் கமரூனின் யாழ்ப்பாண பயணம் குறித்து, முன்னாள் கிரிககெட் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வெளியிட்டிருந்த கருத்துக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக டேவிட் கமரூன் இலங்கை வந்திருந்த போது, சனல் 4 தொலைக்காட்சி முரளிதரனை பேட்டி எடுத்திருந்தது.

குறித்த செவ்வியில், பிரித்தானிய பிரதமர் முன்னர் இலங்கைக்கோ அல்லது முரளிதரன் தனிமைப்படுத்தி கூறிய யாழ்ப்பாணத்துக்கோ சென்றிருக்கவில்லை.

எனவே அவர் தவறாக வழிநடத்தப்பட்டதாக முரளிதரன் தமது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
20, 30 தாய்மார் வந்து குறைகூறி அழும் போது, அதனை எவ்வாறு உண்மை என்று ஏற்றுக் கொள்வது என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த கருத்துக்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழர் என்ற அடிப்படையில் சிறந்த பந்துவீச்சாளர் ஒருவர் என்று தமிழர்கள் பெருமைப்பட்டிருந்த நிலையில், முரளிதரனின் கருத்து பாரதூரமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், கணவனை இழந்த இளம் பெண்கள் என்று பலர் மனக்குமுறலை வெளிப்படுத்தி வரும் நிலையில், முத்தையா முரளிதரன் முன்பின் தெரியாமல் கருத்து தெரிவிப்பது மனவுளைச்சலை ஏற்படுகின்றது.
போராலும், மனிதவுரிமை மீறல்களாலும் இன்று வாழ்க்கையை தொலைத்து நிற்கின்ற எமது மக்களின் நிலைமை குறித்து தமிழர் என்று நாங்கள் கருதிக் கொண்டிருக்கும் பிரபல கிரிககெட் போட்டியாளர் கரிசனை இன்றி சர்வதேச ஊடகத்திடம் பேசியிருப்பது மக்களின் மனங்களில் சேறுபூசும் செயற்பாடு.
எமது சமூகத்தின் மீது கேலி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
எனவே, முத்தையா முரளிதரன் மன்னிப்புக் கோரவேண்டும். இல்லையென்றால் காணாமல் போனோர் அமைப்பு வடக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தை ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொள்ளும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை விடுத்தார்