பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2013

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 


போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை நடைபெற்ற இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 12.11.2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, தீர்மானத்தை சுட்டிக்காட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கடிதங்கள் மூலம் தங்களுக்கு தெரிவித்திருந்தேன். சட்டமன்றத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அதன் நகலை அனுப்பியிருந்தேன். 
ஆனா இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் தலைமையில் குழுவை அனுப்ப மத்திய அரசு தேர்வு செய்தது துரதிர்ஷ்டவசமானது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு முரணாக இந்த முடிவு உள்ளது. இது தமிழர்களின் உணர்வை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம் ஆகும்.
இந்நிலையில், மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் முக்கியமான இப்பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்கப்பட்டது. அப்போது, காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை உங்களது பரிசீலனைக்காக அனுப்பியிருக்கிறேன். இதனை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.