பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2014

சர்வதேச விசாரணையே தேவை நிஷாவிடம் கோரும் கூட்டமைப்பு; கொழும்பில் இன்று இரவு விசேட சந்திப்பு 
"இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவை. இதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்
பெற்றுத்தரும். சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா கட்டாயம் நிறைவேற்றியே ஆகவேண்டும்."
 
இவ்வாறு இன்று உத்தியோக பூர்வப் பயணம் மேற்கொண்டு கொழும்பு வரும் தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை "உதயனி'டம் தெரிவித்தார்.  
 
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை இலங்கை அரசு ஒருபோதும் வழங்கமாட்டாது. எனவே, சர்வதேச சமூகம் தான் தமிழருக்கான கெளரவமான அரசியல் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் நிஷாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இன்று இலங்கை வருகின்றார். அவர் வந்த கையோடு இன்றிரவு 7 மணிக்கு கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் இங்கு வருகின்றார். இவரிடம் முக்கிய பல விடயங்களை நாம் எடுத்துக்கூறவுள்ளோம். 
 
இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இழைத்த போர்க்குற்றங்கள், இன அழிப்புக்கு ஒப்பான மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உள் நாட்டு விசாரணை நீதியைப் பெற்றுத்தராது. 
 
எனவே, இது தொடர்பில் சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் ஜெனிவாவில் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்.
 
மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். காணாமல்போன தமது சொந்தங்களைத் தேடி அலையும் உறவுகளுக்கு சர்வதேச சமூகம் ஐ.நாவில் நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். 
 
சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும். அரசின் அனுமதியுடன் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் காணி சுவீகரிப்புகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 
 
தமிழ் மக்களின் வாழ் விடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் வலிகாமம் வடக்கு, சம்பூர் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வடக்கு மாகாணசபை அரசின் முட்டுக்கட்டைகள் எதுவுமின்றி முறையாக இயங்கக்கூடிய சூழல் ஏற்படவேண்டும். 
 
வடக்கு, கிழக்கு மக்கள் தமது தாயகத்தில் கெளரவமாக - சுதந்திரமாக வாழக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை சர்வதேச சமூகம் பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு பல முக்கிய விடயங்களை நிஷா தேசாய் பிஸ்வாலிடம் எடுத்துரைக்கவுள்ளோம் - என்றார்.
 
இலங்கைக்கு இன்று வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் அரச தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் நாளை சனிக்கிழமை அவர் வடக்கு செல்கின்றார். 
 
அங்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள், வடக்கு ஆளுநர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
 
இவர், இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரிட்டனுக்கும் பின்னர் ஜெனிவாவுக்கும் செல்லவுள்ளார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரவுள்ளதாக எச்சரித்துள்ள பிரிட்டனுக்கு, இலங்கை தொடர்பிலான தற்போதைய நிலைமைகளை உதவிச் செயலர் விளக்குவார் என்றும் அதன் பின்னர், பிரிட்டனின் அனுசரணையுடன் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மா னத்தை ஜெனிவாவில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவார் என்றும் தெரியவருகின்றது.
 
இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரிட்டன் அரசுப் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக நிஷா எதிர்வரும் 3 ஆம் திகதி லண்டன் செல்வார்.
 
பின்னர் அவர் ஜெனிவா சென்று, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வில் இலங்கை மீது கொண்டுவரவுள்ள தீர்மானம் குறித்த சந்திப்புகளை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது