பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2014


சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொம்பே பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் மிரிஹானை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மெல் குணசேகரவின் கையடக்க தொலைபேசி சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மெல் குணசேகரவின் (வயது 46) சடலம் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில் ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டுப்பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நுகேகொடை பொலிஸ் மோப்பநாய் பிரிவைச் சேர்ந்த 'ரோஹி' என்றழைக்கப்படும் மோப்பநாய் ஒரு கிலோமீற்றர் தூரம் மோப்பமெடுத்துச்சென்று அசோக சுற்றுவட்டத்திற்கு அருகில் நின்றுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஊடகவியலார் மெல் குணசேகரவைக் கொலை செய்யப் பயன்படுத்தியதாக கூறப்படும் துளையிடும் ஆயுதம், கத்தியின் கைப்பிடி வேறாகவும் கத்திவேறாகவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டாம் இணைப்பு
ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக வர்ணம் பூசும் ( பெயின்டர்) தொழில் ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் இன்றுக்காலையிலேயே வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டின் முன் வாயிலை திறந்துகொண்டு உள்நுழைகையில் ஊடகவியலாளர் அவரை இனங்கண்டு கொண்டதையடுத்தே தன்னிடமிருந்த கத்தியால் ஊடகவியலாளரை குத்தியதுடன் வீட்டிலிருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் அந்த வீட்டில் அல்லது பக்கத்து வீடுகளில் சில நாட்கள் வேலைக்கு சென்றிருக்கலாம் என்றும் இன்று, வீட்டார் தேவாலயத்திற்கு சென்றதை நன்றாக தெரிந்து வைத்திருந்தே இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரூபா 1200 உம், கையடக்க தொலைப்பேசியும் களவெடுத்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ள போதிலும் அதற்கு கூடுதலான தொகையை அவர் திருடியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த நபர் ஹங்வெல்லவிற்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் கைது செய்யப்படும்போது நன்றாக மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வீட்டுக்குள் நுழையும் விதம் மற்றும் வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்த வீட்டில் மற்றும் பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களில் பதியப்பட்டுள்ள காட்சிகளை வைத்தே சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.