பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

ஜெனிவாவில் ஆபிரிக்க நாடுகளை மடக்க தென்னாபிரிக்காவின் காலில் விழுகிறது சிறிலங்கா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, தென்னாபிரிக்காவின் காலில் விழுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ள நிலையில், இந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு சிறிலங்காவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருகட்டமாக, ஆபிரிக்க பிராந்திய குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளை மடக்குவதற்கு, தென்னாபிரிக்காவைப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆபிரிக்க வலயத்தில், அல்ஜீரியா, பெனின், பொட்ஸ்வானா, புர்கினா பாசோ, கொங்கோ, ஐவரிகோஸ்ட், எதியோப்பியா, காபோன், கென்யா, மொரோக்கோ, நமீபியா, சியரலியோன், தென்னாபிரிக்கா ஆகிய 13 நாடுகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்றன.

இந்த நாடுகள் மத்தியில், தென்னாபிரிக்காவுக்கு செல்வாக்கு உள்ளதால், அதனைப் பயன்படுத்தி, ஆபிரிக்க வலய நாடுகளை மடக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கென தென்னாபிரிக்காவுக்கு சிறிலங்கா அமைச்சர்கள் குழுவொன்றை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தக் குழு எப்போது பயணத்தை மேற்கொள்ளும் என்பது குறித்தோ, குழுவில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்தோ இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தென்னாபிரிக்கா அக்கறை காட்டுவதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஐ.நா மனிதஉரிமை பேரவையில் தனக்குள்ள சவால்களை சமாளிக்க தென்னாபிரிக்காவைப் பயனபடுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, ஐ.நா மனிதஉரிமை பேரவையில் உள்ள சமவால்களைச் சமாளிப்பது குறித்து சீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்றுமாலை பெய்ஜிங் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.