பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014

நள்ளிரவு அல்லது அதிகாலையில் வெளிச்சங்களை பாய்ச்சியவாறு வீடுகளுக்குள் நுழைந்தவர்கள் எங்கள் பிள்ளைகளை விசாரணைக்கென கூறி அழைத்துச் சென்றார்கள்நெஞ்சை உருக்கும் கண்ணீர் கதைகள்
யாழ்.குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் படையினர் சீருடையுடன் ஆயுதங்கள் தாங்கியவாறு எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து எங்களை தாக்கிவிட்டு பிள்ளைகளை கொண்டு சென்றனர்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே? எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளனர்.
ஆணைக்குழுவின் 2ம் அமர்வு நேற்றய தினம் சாவகச்சேரி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தபோதே மக்கள் மேற்படி சாட்சியத்தினை கண்ணீர்மல்க வழங்கியிருக்கின்றனர்.
சாட்சியத்தில் மக்கள் கூறுகையில்,

நள்ளிரவு அல்லது அதிகாலையில் வெளிச்சங்களை பாய்ச்சியவாறு வீடுகளுக்குள் நுழைந்தவர்கள் எங்கள் பிள்ளைகளை விசாரணைக்கென கூறி அழைத்துச் சென்றார்கள். அவர்கள் படையினரே. அவர்கள் படையினரின் சீருடை அணிந்திருந்தார்கள்.  ஆயுதங்களை வைத்திருந்தார்கள், எங்களை தாக்கினார்கள் என அந்த சாட்சியத்தில் கூறியிருக்கின்றார்கள்.
சாட்சியத்தில் வனிதாஸ் ரதிதேவி என்பவர் தன் கணவர் வனிதாஸ் (வயது26) பற்றிய சாட்சியமளிக்கையில்,
2007ம் ஆண்டு 9ம் மாதம் 5ம் திகதி வீட்டிலிருந்த என் கணவனை வீட்டிற்குள் வந்த படையினர் விசாரணைக்கென அழைத்துச் சென்றார்கள். அவர்களை முன்னர் இடம்பெற்ற சுற்றி வளைப்புக்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களில் இருவர் தங்கள் பெயர் மகேஸ், தீபன் என கூறினார்கள். நன்றாக தமிழ் மொழியில் பேசினார்கள். அதன் பின்னர் என் கணவனைக் காணவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என சாட்சியமளித்திருந்தார்.
எஸ்.பரிமளாதேவி என்பவர் தன் மகன் தொடர்பான சாட்சியத்தில்,
எஸ்.வரதராஜா 1996ம் ஆண்டு 08ம் மாதம் 11ம் திகதி இரவு 9.15மணியளவில் பெரிய வெளிச்சங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த படையினர் கதவை திறக்குமாற சத்தமிட்டனர்.
அப்போது மின்சார வசதிகள் கிடையாது.
இந்நிலையில் நாங்கள் விளக்கு வெளிச்சத்தை தூண்டிய நிலையில் பார்த்துக் கொண்டிருந்தோம். அச்சமயம் கதவை உதைந்து உடைத்த படையினர் வீட்டிற்குள் நுழைந்து எம்மை கடுமையாக தாக்கினார்கள். பின்னர் என் மகன் இருந்த இடத்திற்குச் சென்று விசாரணை இருக்கின்றது வா என கூறி மக  அணிந்திருந்த சட்டையால் கைகளை கட்டி இழுத்துச் சென்றார்கள்.
க.தர்மநாதன் பற்றி அவருடைய மனைவி சாட்சியமளிக்கையில், என் கணவர் காணாமல்போகும்போது அவருக்கு (வயது 45) 2006ம் ஆண்டு 8ம் மாதம் 8ம் திகதி காணாமல்போனார். சாவகச்சேரி நகரத்தில் சொந்தமாக வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டிக் கொண்டிருந்தார். சம்பவ தினத்தன்று என் கணவருடைய வாகனத்தை இருவர் வாடகைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். அதனை அவருடைய நண்பர்கள் தெரிந்திருக்கிறார்கள்.
பின்னர் அவரைக் காணவில்லை. பருத்தித்துறை நோக்கி கனகம்புளியடி வீதி ஊடாகச் சென்று கொண்டிருந்துள்ளார். பின்னர் அவருடய வாகனம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் படைமுகாமிற்கு முன்பாக மாலை 3மணி தொடக்கம் 7மணிவரையில் நின்றதாக அப்பகுதியால் சென்ற லொறி சாரதிகள் மற்றும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் நேரடியாகவே கண்டிருக்கின்றார்கள்.
அதன் பின்னர் என் கணவர் பற்றிய எந்தவிதமான தகவலும் இல்லை. இதன் பின்னர் என் கணவருடைய நண்பர் ஒருவர் கடல்மார்க்கமாக கொழும்பு செல்ல பலாலி ஊடாகச் சென்றவேளை பலாலி படைமுகாமில் என் கணவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது தான் கைகாட்டியதாகவும் ஆனால் அவர் திரும்ப கைகாட்டாமல் திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றுவிட்டதாகவும் என் மகனுக்கு தொலைபேசியில் கூறியிருக்கிறார்.
இதேபோன்று என் கணவருடைய வாகனம் மண்டான் படைமுகாமில் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாக என் கணவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண்டு எமக்கு கூறியிருக்கின்றார்கள்.
என் கணவரை மீட்டுத்தாருங்கள் என சாட்சியமளித்துள்ளார். இதேபோன்றே 1996 தொடக்கம் 2008வரையான காலப்பகுதியல் படையினரால் சுற்றிவளைப்பு மற்றும் வீடு புகுந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றியதாகவே, அனேக முறைப்பாடுகள் படையினருக்கு எதிரானதாக அமைந்திருந்தது.
காணாமல் போனவர்கள் தொடர்பாக 44 முறைப்பாடுகள் பதிவு
வடக்கில் காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.குடாநாட்டிற்கான 2ம் அமர்வு நேற்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலர் அலுவலகத்தில் இடம் பெற்றிருந்த நிலையில் 44முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இவற்றில் பெரும்பாலானவை படையினருக்கு எதிரானவையாக அமைந்துள்ளது. நேற்றய அமர்வுகள் காலை 10மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30மணிவரையில் நடைபெற்றிருந்தது.
இதற்காக 59 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் 44போர் அமர்வில் சாட்சியமளித்திருந்தனர். மேலும் புதிய பதிவுகளும் எடுக்கப்பட்டு பிறிதொரு தினத்தில் அவர்களுக்கான விசாரணை அமர்வினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2009ம் ஆண்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் காணாமல்போனவர்கள் பற்றிய சில முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
மேலதிகமானவை 1996ம் ஆண்டு தொடக்கம் 2008வரையான காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் சுற்றிவளைப்பு மற்றும் வெள்ளைவாக கடத்தல்கள் மூலம் காணாமல்போனவர்கள் பற்றியதாக உள்ளது.
மேலும் நேற்றய தினம் இரு தனிப்பட்ட இரகசிய விசாரணைகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. மற்றும் யாழ்.நாவற்குழி பகுதியில் 1996ம் ஆண்டு சுற்றிவளைப்பின்போது சுமார் 54போர் கைதுசெய்யப்பட்டு அவர்களில் காணாமல்போயுள்ள 25பேரில் 4 பேரின் உறவினர்கள் சம்பவம் தொடர்பாகவும் சம்பவம் நடைபெற்ற சமயம் அப்பகுதியில் கடமையிலிருந்த டுமிந்த என்ற படை அதிகாரி, தொடர்பாகவும் முறைப்பாடுகள் பதிவு செய்திருக்கின்றனர்.
இவை தவிர கடத்தப்பட்டு காணாமல்போனதன் பின்னர் கடத்தப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் உறவினர்களை தொடர்பு கொண்டமை தொடர்பாகவும் சாட்சியங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ம.நிரூபன்(வயது 24) என்ற இளைஞர் தொடர்பாக அவருடைய சகோதரி சாட்சியமளிக்கையில்,
மேசன் தொழிலாளியான தன் சகோதரன் உரும்பிராய் பகுதியில் வீட்டு வேலைக்காக சென்றிருந்த சமயம் 2007ம் ஆண்டு 08ம் மாதம், 16ம் திகதி படையினர் சுற்றிவளைத்து என் சகோதரனையும் மற்றொருவரையும் கைதுசெய்தனர்.
பின்னர் ஸ்டிபன் என்பவர் வவுனியா ஜோசெப் படைமுகாமிலிருந்து கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். அதில் எங்கள் சகோதரனை காண்பிக்க 25ரூபா தரும்படியும் கேட்டிருந்தார்.
மேலும் அவர் எழுதியிருந்த கடிதத்தை யாருக்கும் காண்பிக்காமல் எரித்து விடுமாறும் கேட்டிருந்தார். ஆனால் நாங்கள் அவ்வாறு கொடுக்கவில்லை. எங்கள் சகோதரனை இன்றுவரையில் காணவில்லை என கூறினார்.
இந்நிலையில் நேற்றைய அமர்வின்போதும் படையினரின் சுற்றிவளைப்புக்களின்போது காணாமல்போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளாகவம், சோதனைச் சாவடி அமைந்துள்ள இடங்களில் காணாமல்போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளாக அமைந்திருந்தன.
இந்நிலையில் ஆணைக்குழுவின் 3ம் அமர்வு இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
€€€