வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வியாழக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி
மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சென்.தோமஸ் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலய அணி மோதி யது.
இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய போதும் ஸ்ரீ லங்கா வித்தியாலய அணியினர் தமக்குக் கிடைத்த பல வாய்ப்புக்களை கோலாக்கத் தவறிவிட்டனர். இதனால் இறுதியில் சமநிலை தவிர்ப்பு உதையின் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.
இதில் ஸ்ரீலங்கா வித்தியாலய அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து இறுதியாட்டத்தில் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி அணியை எதிர்த்து தேவரையாளி இந்துக் கல்லூரி அணி மோதியது. இரு அணிகளும் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
முற்பாதியாட்டம் விக்னேஸ்வராக் கல்லூரி அணிக்குச் சாதகமாக இருந்த போதும் தேவரையாளி இந்துக் கல்லூரியின் கோல்காப்பாளரால் தடுக்கப்பட்டது. பிற்பாதி ஆட்டத்தின் பின்னர் விக்னேஸ்வராக் கல்லூரி அணி தமது ஆட்ட வியூகத்தை மாற்றி அமைத்து முன்னேறிய போதும் தேவரையாளி இந்துக் கல்லூரி அணியினர் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேவரையாளி இந்துக் கல்லூரியின் பின்கள வீரர்களைத் தாண்டி பந்து கொண்டு செல்வதில் விக்னேஸ்வரா கல்லூரி அணியினர் சிரமப்பட்டனர்.
இதனால் ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது. இதனால் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் விக்னேஸ்வரா கல்லூரி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் ஆனது. 2 ஆம் இடத்தை தேவரையாளி இந்துக் கல்லூரியும் 3 ஆம் இடத்தை ஸ்ரீலங்கா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன. |