பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2014

தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைப்பேன் – அரசியலில் குதித்த அனிதா பிரதாப் வாக்குறுதி

இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பும், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் 1984 ம் ஆண்டு சண்டே இதழுக்காக, முதன் முதலாக செவ்வி கண்டவர் அனிதா பிரதாப்.

இந்திய இராணுவம் சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் போர் இடம்பெற்ற பகுதிகளில் தனது ஊடகப் பணியை மேற்கொண்டிருந்த அனிதா பிரதாப், தனது அனுபவங்கள் தொடர்பாக “இரத்தத்தீவு” என்ற நூலையும் எழுதியவர்.

இந்தியா ருடே மற்றும் ரைம் சஞ்சிகைகளில் பணியாற்றிய அனிதா பிரதாப், 1999 ஆம் ஆண்டுவரை சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசியப் பிரிவின் செய்திப் பணிப்பாளராக கடமையாற்றினார். 
இவர் தற்போது, ஆம் ஆத்மி கட்சி மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைத் தொடர்ந்து, அக்கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

இவர் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே, மக்களை சந்தித்து ஆதரவு கோர தொடங்கியுள்ளார் அனிதா பிரதாப்.

தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இவர், “எனது ஊடகப் பணியின் தொடர்ச்சியாகவே இதை பார்க்கிறேன்.

சமூக அவலங்களை களைய இந்த புதிய களம் வாய்ப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

“போர்முனையில் செய்தி சேகரிக்கச் சென்றதால், அங்கிருந்த மக்களின் துயரத்தை நேரடியாக அறிந்து கொள்ள முடிந்தது.

போர்முனையில் அவதிப்படும் மக்களின் உணர்வுகள் என்னை பாதித்தன.

தெற்காசியா பகுதியில் மனிதஉரிமையையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையிலான முக்கிய பங்களிப்பை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்காவில் உள்ள கள நிலவரத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கு தெரிவிப்பேன்.

தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்தும் தெரிவிப்பேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.