பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

விமானம் மாயமான விவகாரம்: மன்மோகன் சிங்குடன் மலேசிய பிரதமர் பேச்சு

மலேசியாவிலிருந்து சீனாவுக்கு செல்லும் வழியில் மாயமாகி, ஒரு வாரத்துக்கும் மேல் கண்டுபிடிக்க முடியாமலிருக்கும் விமானத்தைத் தேடும் முயற்சியில் உதவுமாறு பிரதமர்
மன்மோகன் சிங்கை மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ""காணாமல் போன விமானம் சென்ற வான்தடங்களைக் கண்டுபிடிப்பதில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மலேசிய பிரதமர் நஜீப் கேட்டுக்கொண்டார்.
விமானத்தில் உள்ள பயணிகளின் நிலை குறித்த தனது கவலையை பிரதமர் நஜீபுடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் விவரத்தை அளித்தது இந்தியா: மலேசிய காவல்துறைத் தலைவர் காலித் அபு பக்கர் கூறுகையில், ""விமானத்தில் பயணம் செய்தவர்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பற்றிய விபரங்களை அளிக்குமாறு அந்தந்த நாடுகளிடம் கேட்டுள்ளோம்.
அவற்றில் இந்தியாவும், சீனாவும் விமானத்தில் பயணம் செய்த தங்கள் நாட்டவர்களைப் பற்றிய விவரங்களை அளித்துள்ளன'' என்று தெரிவித்தார்.