பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2014


மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைவதால், சிதம்பரம் நகரில் அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் வாகனங்களில் ஊர்வலமாக சென்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம் நகரம் கூச்சலும், கும்மாளமாக அல்லோலப்பட்டது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சுதாமணிரத்தினம், அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமான் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசார இறுதிகட்ட நாளான செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகரில் வேட்பாளர்களை ஆதரித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வாகனங்களில் ஊர்வலமாக சென்று நகரம் முழுவதும் வாக்கு கேட்டனர்.
திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நகர திமுக செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் வன்னிஅரசு ஆகியோர் தலைமையில் தெற்குவீதி கட்சி அலுவலகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்டு நகர முழுவதும் அனைத்து தெருக்களுக்கும் சென்று திருமாவளவனுக்கு மோதிரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
அதிமுக: அதிமுகவினர் கீழவீதி அதிமுக அலுவலகத்திலிருந்து நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்டு நகர வீதிகளில் வேட்பாளர் மா.சந்திரகாசிக்கு வாக்கு கேட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் நகரச் செயலாளர் கே.கலியபெருமாள், மாவட்ட இலக்கிய அணி பிரிவு செயலாளர் சொ.ஜவகர், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆ.ரமேஷ், தொகுதி இணைச் செயலபாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பாமக: பாமக வேட்பாளர் சுதாமணிரத்தினத்திற்கு வாக்கு கேட்டு அவரது கணவர் கே.ஐ.மணிரத்தினம், பாமக மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், நகரச் செயலாளர் முத்து.குமார், பாஜக மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், மதிமுக வழக்கறிஞர் கே.வி.மோகனசுந்தரம், புதிய நீதிகட்சி உமாசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக சென்று நகரம் முழுவதும் வாக்கு சேகரித்தனர்.
காங்கிரஸ்: காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமான் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று நகர வீதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் வாக்கு கேட்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், நகரத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன், மூப்பனார் பேரவைத் தலைவர் ஆர்.மக்கீன், பொதுச்செயலாளர் கே.நாகராஜ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பி.கே.காந்தி, எம்.ஜி.ராஜராஜன், ராஜாசம்பத்குமார், கே.ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
பாமக ஊர்வலத்தில் தேமுதிக புறக்கணிப்பு
பாமக வேட்பாளரை ஆதரித்து சென்ற ஊர்வலகத்தை தேமுதிகவினர் பங்கேற்காமல் புறக்கணித்து சென்றனர். பின்னர் பாதி ஊர்வலத்தில் சிறுது நேரம் பங்கேற்றுவிட்டு சென்று விட்டனர். பாமக வேட்பாளர் தேமுதிக கிளைச் செயலாளர் பூத்செலவிற்கு குறைந்தளவே பணம் வழங்கியதால், அதனை வாங்க மறுத்து கோபித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.