பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2014


குருநகர் யுவதி மரணம்: ஆயர் இல்லம் அறிக்கை
யாழ்ப்பாணம் குருநகரில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றா என்ற இளம் பெண்ணின் மரணம் தொடர்பில், பாதிரியார் ஒருவர் தொடர்புபட்டிருப்பதாக வெளியான செய்தி தொடர்பில் ஆயர் இல்லம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குருநகர் அடப்பன் வீதியில் வசித்துவந்த ஜெரோமி கொன்சலிற்றா என்ற 22 வயதுடைய யுவதி சடலமாக மீட்கப்பட்டார்.
குருநகரில் உள்ள மறைக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்துள்ள குறித்த யுவதி,  அங்கு பாதிரியார் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளதாகவும், இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்ததாகவும் யுவதியின் பெற்றொர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பாக ஆயர் இல்லம்  வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
யாழ். பேராலயத்தில் நவம்பர் 2013 – பிப்ரவரி 2014 காலப் பகுதியில் மறையாசிரியராகக் கடமையாற்றிக் கடந்த 14-04-2014 அன்று மரணமடைந்த செல்வி ஜெரோமி கொன்சலிட்டா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மேலும், குறிப்பிட்ட மரணம் தொடர்பாக பேராலய உதவிப் பங்குத் தந்தையர்கள் இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவ் விசாரணைக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.
மேற்படி உதவிப் பங்குத் தந்தையர்களின் தவறான செயற்பாடுகளாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்படி பெண்ணின் மரணத்துக்கு முன்னதான காலப் பகுதியிலோ அல்லது பின்னதான காலப் பகுதியிலோ, பெற்றோராலோ அல்லது வேறு எந்தத் தரப்பாலோ, பேராலயப் பங்குத் தந்தையிடமோ அல்லது ஆயர் இல்லத்திலோ எந்தவித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாகக் குறிப்பிட்ட பெண் எவ்வித வெளித் தொடர்புகளுமற்ற நிலையில் வீட்டிற்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைத் தன்மை பாரதூரத்தன்மை என்பவற்றை நாம் ஆய்ந்தறிவதற்கு உதவியாக தொடர்பானவர்கள் உரிய முறையில் எம்மோடு தொடர்பு கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தவறுகள் மறைக்கப்படக்கூடாது என்பதே எமதும் நிலைப்பாடாகும். எனினும், ஊடகங்களில் வெளிவரும் அனைத்துச் செய்திகளும் முற்றிலும் உண்மையானவை என்று ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மிகைப்படுத்தலும் வெவ்வேறு தரப்புக்கள் தமக்குச் சார்பாக விடயங்களை திரிபுபடுத்தலும் இன்றைய சூழலின் யதார்த்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளால் குழப்பமடையாது, உரிய விடயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து உண்மையை அறிய முயலவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பான செய்திகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய அனைத்து கிறிஸ்தவ மற்றும் பிற மத சகோதரர்களுக்கும் எமது மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து குருக்களும், திருச்சபையும் கிறிஸ்தவ நன்நெறிவழி நின்று எமது பணியை முன்னெடுப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆயர் இல்லம்,
யாழ்ப்பாணம்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyESbLXjo7.html#sthash.VT68n6nT.dpuf