பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2014

தமிழை அழிக்க முற்பட்டு இன்று 33 ஆண்டுகள் 
 காலங்கள் கடந்தாலும் ஈழத்தமிழர்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தீ வெகு சீக்கிரத்தில் அணையக் கூடியதல்ல.
 
1981ம் ஆண்டு 31ம் திகதி தமிழர்களின் அறிவினை அழிக்க காடையர்களும் இனவெறி பிடித்த அரசியல்வாதிகளும் விஸ்பரூபம் எடுத்த நாள் இது.
 
ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 33 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
 
தமிழர்களின் அறிவு களஞ்சியமாகவும் தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகத்தை இனவெறியர்கள் அழித்தொழித்தனர்.
 
தமிழகத்தில் இல்லாத அரிய பல நூல்கள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை யாழ்ப்பாண பொது நூலகத்தில் இருந்தன.
 
97 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அறிவுப் பசியைப் போக்க யாழ் பொது நூலக அன்னை தன்வசம் கொண்டிருந்தாள்.
 
நூலகத்தை அழித்தால் தமிழர்களின் அறிவை அழித்து விடலாம் என்று சிங்கள இனவாதிகள் தப்புக் கணக்குப் போட்டு இனவாத தீயால் பல ஆயிரம் அரிய தமிழ் பொக்கிஷங்களை  சாம்பலாக்கினர்.
 
 
யாழ் நூலகம் அழிக்கப்பட்டதை எண்ணி தமிழ் சமூகம் மட்டுமல்லாது சிங்கள அறிவார்ந்த சமூகமும் இன்றும் கவலை கொண்டுள்ளது.
 
இலங்கை இனப்பிரச்சினையில் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் முக்கிய விடயமாகும்.
 
அதுமட்டுமின்றி ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியதுடன் விடுதலைப் போராட்டத்தை மேலும் உத்வேகமூட்டியது எனலாம்.
 
பீனிக்ஸ் பறவையைப் போல யாழ்.நூலகம் மீண்டெழுந்திருந்தாலும் சாம்பலாகிப் போன நூல்களை எவராலும் திரும்பத்தர முடியாதல்லவா?
 
எது எப்படியிருந்தாலும் யாழ் நூலக எரிப்பானது ஈழத் தமிழர்களின் மனதில் மாத்திரமல்ல ஒட்டுமொத்த உலக தமிழ் சமூகத்தில் ஒரு நீங்கா வடுவாகும்.