பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2014


இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி 71 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழா




தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்தவர் இளையராஜா.

தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட இளையராஜா உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று, தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமையை தேடித் தந்துள்ளார்.

நமது நாட்டின் மிகச் சிறந்த இசையமைப்பாளராக மட்டுமின்றி, வாத்தியக் கலைஞராகவும், இசைக் குழுவை நிர்வகிப்பவராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும் இளையராஜா உள்ளார்.  இதுவரை 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமான பாடல்களை வழங்கியுள்ள இவர், பல்வேறு மொழிகளில் 950 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற்ற இளையராஜா ரசிகர் மன்றம் தொடக்க நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். துவங்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள்ளாகவே இந்த ரசிகர் மன்றத்தில் கவிஞர்கள், பாடகர்கள், பாடகியர், இசைக்கலைஞர்கள் என சுமார் ஒரு கோடி பேர் அங்கத்தினராக பதிவு செய்துக் கொண்டுள்ளனர்.

திரை இசையுலகில் யாருமே எட்ட முடியாத சாதனைக்கு சொந்தக்காரர் என்று கருதப்படும் இளையராஜாவின் 71-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்தனர்.

தனது பிறந்த நாட்களின் போது ‘கேக்’ வெட்டப்படுவதையும், வீண்ஆடம்பர செலவுகள் செய்வதையும் வெறுத்து வரும் இளையராஜா, மக்களுக்கு பயன் அளிக்கும் விதமாக நற்பணிகளை செய்யுமாறு தொடர்ந்து தனது ரசிகர்களை வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து, அவரது பிறந்த நாளான ஜுன் 2-ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 71,001 மரக்கன்றுகளை நட அவரது ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்தனர்.

முதல் மரக்கன்றை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா நட்டார். தொடர்ந்து அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டனர்.