பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூலை, 2014


முருகனை சந்திக்க தடை விதித்ததால் சிறையில் நளினி 2வது நாளாக உண்ணாவிரதம்!
கணவர் முருகனை சந்திக்க தடை விதிக்கப்பட்டதால் சிறையில் தொடர்ந்து நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் மத்திய சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் சிறையில் முருகனிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து முருகன், நளினியை சந்திக்க 2 வாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 12ம் தேதி அவர்கள் சந்திக்கவில்லை.
கணவரை சந்திக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் நளினி, சிறையில் அளிக்கப்படும் உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனால் அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் வெளியே வந்த புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"முருகனுடன் சந்திக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து நளினி சிறையில் 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் சோகத்துடனும், சோர்வுடனும் உள்ளார்.
நளினியை சமாதானப்படுத்த சிறையில் அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது" என்றார்.