பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2014


இந்திய நர்சுகள் 46 பேரும் விடுவிக்கப்பட்டனர்.ஈராக்கிலிருந்து நாளை கேரளா வருகின்றனர்
ஈராக்கில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய நர்சுகள் அனைவரும் நாளை காலை கேரளா வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் போர் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடி. மற்றவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
தூத்துக்குடி மற்றும் கூடலூர் நர்சுகள் தினமும் ஊரில் உள்ள குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்தனர். தங்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் மூலம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர். ஆனால் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தவோ, தொடர்பு கொள்ளவோ முடியவில்லை. இதனால் அவர்களை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் திக்ரித் நகரில் இருந்த 46 நர்சுகளை தீவிரவாதிகள் நேற்று திடீர் என்று வேறு இடத்துக்கு வலுக்கட்டாயமாக பஸ்சில் கடத்திச் சென்றனர். இதுபற்றி நர்சுகள் பெற்றோருக்கும் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உதவி கேட்டு கதறினார்கள். ஆனால் அந்தப் பகுதி ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாததாலும், தீவிரவாதிகளை அணுக முடியாததாலும் தீவிரவாதிகள் சொல்வதை ஏற்று அவர்களுடன் செல்லுமாறு தூதரக அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.
இதற்கிடையே கடத்தப்பட்ட நர்சுகளின் செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் பெற்றோர் கவலை அடைந்தனர். கடத்தப்பட்ட நர்சுகள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியாமல் இருந்தது. நள்ளிரவுக்குப் பின் அவர்கள் திக்ரித் நகரில் இருந்து 225 கி.மீ. தொலைவில் உள்ள மொசூல் நகர் அருகே இருப்பதாக தெரியவந்தது. அவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி அனைவரும் பத்திரமாக இருப்பதை உறுதி செய்தனர்.
திக்ரித் ஆஸ்பத்திரியில் இந்திய நர்சுகள் இருந்த போது அங்கு குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதில் சிலருக்கு கண்ணாடி சிதறல்கள் பட்டு காயம் ஏற்பட்டது. எனவேதான் பாதுகாப்பு கருதி நர்சுகளை வேறு இடத்துக்கு கடத்திச் சென்று வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நர்சுகள் அனைவரையும் இன்று விடுவிப்பதாக கூறிய தீவிரவாதிகள், அவர்களை எர்பில் நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து நர்சுகள் 46 பேரும் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். எனவே, நர்சுகள் நாளை காலை கேரளா வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் நாடு திரும்புவதை கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் உறுதி செய்துள்ளார்.
“டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று மாலை எர்பில் நகருக்கு புறப்பட்டது. அதில் கேரளா சார்பில் ஒரு அதிகாரியும், மத்திய அரசு சார்பில் ஒரு அதிகாரியும் சென்றனர். அந்த விமானத்தில் நர்சுகள் நாளை காலை 7 மணியளவில் கொச்சியை வந்தடைவார்கள்” என்று சாண்டி கூறினார். இதனால் நர்சுகளின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.