பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2014


செட்டிக்குளத்தில் 6348 ஏக்கர் காணியை இராணுவம் சுவீரிக்க அனுமதி வழங்க முடியாது: ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு
வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்க கோரியுள்ள 6348 ஏக்கர் காணியையும் வழங்க முடியாது என செட்டிக்குளம்
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, செட்டிக்குளம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி அபிவிருத்திக் குழு தலைவருமான றிசாத் பதியூதீன் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செட்டிக்குளம் பிரதேச மக்களின் காணிகள் உள்ளடங்களாக 6348 ஏக்கர் காணியை இராணுவத் தேவைக்காக வழங்குமாறு காணி அமைச்சின் மேலதிக செயலாளரினால் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இக்காணிகள் தனியாருக்கு சொந்தமான காணிகளாகும். அதில் அருவி ஆற்றின் கீழ் விவசாயம் செய்கை பண்ணப்பட்ட 600 ஏக்கர் வயல் நிலங்களும் அடங்குகின்றது. தற்போது இக்காணிகளுக்குள் நுழைய முடியாது எனவும் இது இராணுவத்தினரின் காணி எனவும் பலகை நாட்டப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இம்மக்களின் காணியை சுவீகரிக்க ஒரு போதும் அனுமதிக்க கூடாது என அப் பகுதி பொது அமைப்புக்கள் கோரிக்கை விட்டன.
இது தொடர்பில் இடம்பெற்ற நீண்ட விவாதங்களின் முடிவில் இக்காணியை இராணுவத் தேவைக்கு வழங்க முடியாது எனவும் அதனை மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அமைச்சருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், நுனைஸ் பாறுக், முத்தலிப் பாறுக், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, ஜெயதிலக, வடமாகாண சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர், செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கமலதாசன், செட்டிக்குளம் பிரதேச சபை உப தவிசாளர் சந்திரமோகன், பிரதேச சபை உறுப்பினர் சிவம், கிராம அலுவலர்கள், பொது அமைப்புக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
- See more at: http://www.TAMILWIN.com/show-RUmsyHTaLbiw3.html#sthash.PvFxeA2E.dpuf