பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2014

மகஜர் வழங்க சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பொலிஸ்; வீதியில் அமர்ந்து போராடினர் உறவுகள் 
காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்றைய தினம் ஜனாதிபதிக்கு மனு ஒன்றினை அனுப்பி வைக்க வவுனியா
மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளிக்க சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்று வட மாகாணங்களில் உள்ள பிரஜைகள் குழுக்கள் மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் ஆகியவற்றினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு வவுனியா நகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் செபமாலை அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காணாமல் போனவர்களது உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

உறவுகளை தொலைத்த ஏக்கத்துடன் இன்று வருவார்கள் நாளை வருவார்கள்  என்று ஏங்கித்தவிக்கும் உறவுகள்  ஒன்றிணைந்திருந்தனர்.

இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினர், மற்றும் பல தமிழ் கட்சிகளும் இணைந்திருந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதியிடம் மனு ஒன்றினை அனுப்பி வைப்பதற்காக அமைதியான முறையில் பேரணியாக வந்தனர். அப்போது இவர்களை மறித்த பொலிஸார் அவர்களை தொடர்ந்தும் செல்லவிடாது தடுத்தனர். இதனால் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதங்களுக்கு பின்னர் வீதியோரமாக  ஒவ்வொருவராக செல்ல அனுமதித்து தொடர்ந்தும் செல்ல அனுமதித்தனர்.

எனினும் பிரதான வீதியை அடைந்ததும் பதாகைகளை தூக்கிக் கொண்டு பேரணியாக வர எத்தணித்தனர். அதனையடுத்து பேச்சை மீறிவிட்டீர்கள்  என்று கூறிக்கொண்டு தொடர்ந்தும் செல்ல முடியாதவாறு தடை விதித்தனர்.

மீண்டும் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதனையடுத்து மக்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் 10 நிமிடங்களுக்கு மேல் வீதியில்  போக்குவரத்து தடைப்பட்டது. எனினும் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையிலான முறுகல் நிலை சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்றது.

மேலும் இன்றைய தினம் விடுமுறை என்பதால் மாவட்டச் செயலகத்தில் எவரும் இல்லாத நிலையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவிருந்த மகஜர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவிடம்  கையளிக்கப்பட்டது. அதனை தாம் ஜனாதிபதியிடம் சேர்ப்பதாக மாவை சேனாதிராசா மக்களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


 
-