பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2014

தமிழக முதல்வரின் நேரத்தை கேட்டு காத்திருக்கும் புதிய  இலங்கை தூதுவர்-இந்தியாவின் நிலையை சமாளிக்க  அனுப்பப்ப்ட்டவரா ?
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்துள்ளதாக இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் சுதர்ஷன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழக முதலமைச்சர், இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கடந்த 31 ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிராக பதவியேற்றுக்கொண்ட செனவிரட்ன, இந்திய ஊடகம் ஒன்றுக்கு முதல் முறையாக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.
ஆராய்ச்சியில் ஈடுபட்ட காலத்தில் அவர் தமிழகத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தனது ஆசிரியர்கள், சகாக்கள் உட்பட தமிழ் நாட்டு மக்களை தன்னால் மறக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எமக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு இருந்தது.
தனது புதிய பணி கடந்த கால பல்கலைக்கழக நட்புகளை மீண்டும் எண்ண தூண்டியுள்ளதாகவும் மீண்டும் தனது வீட்டுக்கு வந்த உணர்வை ஏற்படுத்தியிருப்பதாகவும் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
கல்வி, புத்தகங்கள், பண்டைய நினைவுச் சின்னங்களுடன் வாழ்வை செனவிரட்ன கழித்து வந்தார். இந்நிலையில் இலங்கையின் மிகப் பெரிய அண்டை நாடான இந்தியாவுடன் அடிக்கடி ஏற்பட்டு வரும் பாதிப்புகளை சரி செய்யும் நோக்கத்தில் கொழும்பு அரசாங்கம் அவரை இந்தியாவுக்கான தூதுவராக நியமித்திருக்கலாம் என இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரில் நடந்த அத்துமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்த நிலையில், செனவிரட்ன இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.