பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2014

திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனை ஏன் நடத்தக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி!

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் அபிநாத் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கும், திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல வன்முறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருச்சி கோர்ட்டில் அபிநாத் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யும்படி அபிநாத் குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணையின்போது, ‘‘அபிநாத்துக்கு ஆண்மை குறைவு இருந்ததும், அதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு கீழ்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் தெரியவந்தது’’.

இதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) நீதிபதி கிருபாகரன் மத்திய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பினார்.

ஆண்மைக் குறைவு, இல்லற உறவில் விருப்பம் இல்லாமை போன்ற காரணத்திற்காக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையை தடுக்க திருமணம் செய்து கொள்ளப்போகும் தம்பதிகளுக்கு, திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனை கட்டாயம் என்ற சட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது?

குடும்பம் சம்பந்தப்பட்ட வழக்குகளை 6 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்மைக் குறைவு இருப்பதை மறைத்து திருமணம் செய்தவரை தண்டிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க ஏன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? என்பது குறித்து மத்திய–மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.