பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2014


நல்லூர்க் கந்தன் ஆலய வளாக விதிமுறைகளை மீறிய அமைச்சர் மேர்வின்
நல்லூர் கந்தனை தரிசிக்க தென்பகுதியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த அமைச்சர் மேர்வின் சில்வா ஆலய விதிமுறையை மீறி செயற்பட்டதாக பக்தர்களினால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நல்லூரானை தரிசிக்க வந்த அமைச்சர் மேர்வின் சில்வாவும், அவருடைய பரிவாரங்களும் உற்சவகாலங்களில் நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்த ஆலய வளாகத்திற்குள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தியும், பாதணிகளை கழற்றாமலும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் மு.ப 12 மணியில் இருந்து பி.ப 2மணி வரைக்கும் மட்டுமே ஆலயச் சூழலில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டும் வானகனங்கள் ஆலய வீதியால் செல்ல யாழ். மாநகர சபை அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் எந்தவொரு வாகனத்திற்கும் அடியவர்கள் பிரதிட்டை செய்யும் ஆலய வளாகப் பகுதிகளில் வாகனம் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கவில்லை.
அத்துடன் பாதணிகளை அணிந்து கொண்டும் ஆலய சூழலில் செல்ல அனுமதித்து இருக்கவில்லை.
இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது பரிவாரங்களும் அனுமதிக்காத இடங்களில் வாகனங்களை நிறுத்தியும், பாதணிகளை அணிந்துகொண்டும் உட்சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொலிஸார் ஒரு சிலர் கூட தங்களுடைய பாதணிகளைக் கழற்றாது இவ்வாறு செயற்பட்டமைக்கு கந்தன் அடியார்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் யாழ். மாநகர சபை, ஆலயச்சூழலில் மகோற்சவ கால பணிமனை அமைத்திருக்கும் நிலையிலும் ஏன் இவற்றை கண்டு கொள்வதில்லை.
மக்களுக்கு ஒரு சட்டமும் இராணுவம், பொலிஸ் மற்றும் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு வேறொரு சட்டமும் அமுல்படுத்தப்படுகின்றனவா?