பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2014

விபத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காரில் இன்று பகல் 12–30 மணி அளவில் சேலம் சென்று கொண்டிருந்தார்.


இவரது கார் கந்தம்பட்டி பை–பாஸ் பக்கம் வந்து கொண்டிருந்தபோது நெல்லையில் இருந்து பெங்களூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வம், முத்துக்குமார் ஆகியோர் ரோட்டை கடந்த பாலுச்சாமி (வயது 65) என்ற முதியவர் மீது மோதி விட்டனர். இதனால் முதியவர் ரோட்டின் நடுவில் விழுந்து கிடந்தார்.
இதை பார்த்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது காரை நிறுத்தி விபத்தில் சிக்கி ரோட்டில் விழுந்து கிடந்த முதியவரை தூக்கி விட்டு அடிப்பட்டு விட்டதா? என விசாரித்தார்.
அதற்குள் அமைச்சரின் உதவியாளர்கள் அங்கு வந்து விட்டனர். பின்னர் முதியவரை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேறு ஒரு காரில் ஏற்ற வைத்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதியவரை இறக்கி விட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார்.
பின்னர் அமைச்சர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வாளர் மாளிகைக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். முதியவர் பாலுச்சாமிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தை அறிந்த சேலம் மாநகர போக்குவரத்து பிரிவு போலீசாரும், சேலம் சூரமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
விபத்தில் சிக்கிய முதியவர் திருவாரூரை சேர்ந்தவர். சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். வேலை முடிந்து வீடு திரும்பும் போது அவர் விபத்தில் சிக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.