பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2014

ராஜித சேனாரத்ன அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினமா?
மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கான தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை தொடக்கம் கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அலுவலகத்தில் இருந்து அவரது பைல்கள் மற்றும் உடைமைகள் ஒதுக்கிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
அலுவலகம் காலி செய்யப்பட்டதன் பின்னர் பெரும்பாலும் இன்று மாலைக்குள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இதற்கிடையே அமைச்சர் பதவியிலிருந்து ராஜித சேனாரத்ன விலகினால், அவருக்கு எதிரான பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு, இரண்டொரு நாட்களுக்குள் அவர் கைது செய்யப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற கடிதத் தலைப்பை தனது வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் உறுப்பினர் பதவி ராஜிதவிடமிருந்து பறிபோனது. அக்காலகட்டத்தில் அவர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சை காலி செய்த ராஜித சேனாரத்ன
மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சில் இருந்து தனது பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜித சேனாரத்னவுடன் தொடர்புகளை கொண்டுள்ள எதிர்க்கட்சியின் பிரதிநிதி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ராஜித சேனாரத்னவின் புதல்வர் கொழும்பு முத்தையா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற தூய்மைக்கான நாளை அமைப்பு நடத்திய பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான மில்ரோய் பெர்ணான்டோ தனது வலது காலை எடுத்து வைத்து ராஜபக்ஷ எதிர்ப்பு முகாமுக்கு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சில் இருந்து தனது பொருட்களை அப்புறப்படுத்த தயாராகி வருவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்க நேற்று கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் அதனை அவர் நிராகரித்து விட்டதாக தெரியவருகிறது.