பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2014

போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி தென்னாபிரிக்காவில் கைது செய்யப்படுவாரா ?
போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி
ஜெனரல் சிறிலால் வீரசூரிய, அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில், 1990ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக இவர் மீது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவ கிறிஸ்துவ உதவித்தொகை சங்கம்  (Association of Military Christian Fellowships) என்ற அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெனரல் சிறிலால் வீரசூரிய நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்கா வருவார் என்று நம்பப்படுகிறது.
இந்த அமைப்பில் ஜெனரல் வீரசூரிய முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
தமிழர்கள் பெருமளவில் நீதிக்குப் புறம்பான வகையில் கொன்று புதைக்கப்பட்ட செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் ஜெனரல் வீரசூரியவின் தொடர்பு குறித்து சட்டவாளர்களும், செயற்பாட்டாளர்களும் கரிசனை கொண்டுள்ளனர்.
சிம்பாப்வேயில் மனிதகுலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, தென்னாபிரிக்காவின் அதிகார வரம்புச் சட்டங்களின் கீழ், சம்பந்தப்பட்டோரை நீதியின் முன் நிறுத்த வேண்டியது தென்னாபிரிக்க அரசின் பொறுப்பு என்று அண்மையில், தென்னாபிரிக்க அரசியலமைப்பு நீதிமன்றம், உறுதிபடக் கூறியிருந்தது.
இது, இலங்கையின் போர்க்குற்றங்களுக்கும் பொருந்தும் என்ற வகையில், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மனிதகுலத்துக்கு எதிராக குற்றம் இழைத்த குற்றச்சாட்டில் ஜெனரல் வீரசூரியவை தென்னாபிரிக்காவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அழுத்தம் கொடுக்கலாம் என்று சட்டவாளர்களும், செயற்பாட்டாளர்களும் நம்புகின்றனர்.
செம்மணிப் புதைகுழி குறித்து நடத்தப்பட்ட விரிவான உண்மை கண்டறியும் செயல்முறைகளில், ஜெனரல் வீரசூரியவுக்கு இருந்த தொடர்புகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் சான்றுகளை சேகரித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.