பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

திருக்கேதீஸ்வரம் புதைகுழி; மூடப்பட்ட கிணறு தொடர்பில் விரிவான அறிக்கையை கோருகிறது மன்று


மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 
மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
அதன்போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 
 
மேலும் புதைகுழி தோண்டப்பட்ட இடத்தில் முன்னர் கிணறு ஒன்று இருந்ததாகவும் தற்போது  மூடப்பட்டுள்ளது எனவே அதனையும் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிய பொதுமக்களின் கையொப்பத்துடன் அறிக்கையொன்று முன்னர் மன்றிற்கு வழங்கப்பட்டிருந்தது. 
 
அதன்படி குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தயட்சகருக்கு மன்று உத்தரவிட்டிருந்தது.  எனினும் வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தயட்சகருக்கு பதிலாக அவரின் பிரதிநிதி ஒருவர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தார்.
 
எனினும் குறித்த இடத்தில் கிணறு இருந்தமைக்கான அடையாளம் எதுவும் இல்லை என்று மன்றில் தெரிவித்திருந்ததுடன் அறிக்கையினையும் சமர்ப்பித்திருந்தார். 
 
இருப்பினும் ஏற்கனவே பொதுமக்களின் கையொப்பம் இடப்பட்டு மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய   கையொப்பம் இட்ட பொதுமக்கள்  சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 
அத்துடன் முறைப்பாட்டினை அடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸாருடன் பொதுமக்களைச் சென்று கிணறு இருந்த இடத்தை அடையாளப்படுத்துமாறும்  உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் கிணறு இருந்த இடம் அடையாளப்படுத்திய பின்னர் அது தொடர்பிலான முழு அறிக்கையினையும் மன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
இதேவேளை, மக்கள் குறித்த இடத்திற்குச் செல்லும்போது தாமும் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் மன்றிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய அவர்களும் செல்ல முடியும் என மன்று அனுமதி வழங்கியிருந்தது. 
 
குறித்த வழக்கு தொடர்பில் இராஜகுலேந்திரா, நிரஞ்சன்,  சிராய்வா மற்றும் சபுர்தீன் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.