பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2015

எதிரணி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. - அமைச்சர் டக்ளஸ் (02.01.2015)
(யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கும் மாபெரும் கூட்ட உரையை
தொடர் ந்து கண்க)
எனது அன்பான மக்களே.
நான் இன்று உங்களிடம் அழைத்து வந்திருப்பது சாமானியமான தலைவரையல்ல. சமாதான தேசத்தின் தந்தையையே நான் உங்களிடம் அழைத்து வந்திருக்கின்றேன்.
எங்களை நேசமுடன் தேடி வந்திருக்கும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களைத் தமிழ் பேசும் மக்களாகிய உங்களது சார்பாக நான் வரவேற்கின்றேன்.
பேரணியாக நீங்கள் திரண்டு வந்திருப்பதன் மூலம், எதிர்வரும் 8 ஆம் திகதி எங்களுக்கே பெருவெற்றி என்பதை நீங்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள்.
இரண்டு பிரதான அணிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றன.
தமிழ் பேசும் மக்களின் சார்பான கட்சிகளோடும், தமிழ் பேசும் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் இடது சாரிக் கட்சிகளோடும் கூட்டுச்சேர்ந்திருக்கும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு புறம். தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்கு எதிரான, இனவாத கூட்டாக சேர்ந்திருக்கும் எதிரணி இன்னொரு புறம்.
சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் இங்கு இருக்கக் கூடாது என்று பேசியபடியே தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் அதே கருத்துகக்ளை பேசி, எங்கும் ஒரே முகம் காட்டி வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அணியினர் இன்னொரு புறமும். சிங்கள மக்கள் மத்தியில் இனவாத நச்சு கருத்துக்களைப் பேசிக்கொண்டு, தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நல்லவர்கள் போல் நடித்து, இரட்டை முகம் காட்டும் எதிரணியினர் ஒரு புறமும்,
தன்னுடன் கூட்டுச்சேர்ந்திருந்த இனவாத சக்திகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இனவாதிகளைக் கட்டுப்படுத்தும் ஆளுமையோடு, தமிழ் பேசும் மக்களுக்கு அபிவிருத்தி முதற்கொண்டு, அரசியல் தீர்விற்கான பாதையை திறந்து விட்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு புறமும்,
தமிழ் பேசும் மக்களுக்கு விரோதமான, அதே இனவாத சக்திகளை இன்று தம்முடன் இணைத்துக்கொண்டாலும், அவர்களைக் கட்டுப்படுத்தி எமது மக்களுக்கு எதையும் ஆற்ற முடியாத, ஆளுமையற்ற எதிரணியினர் இன்னொரு புறமும்,
எமது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற விரும்பும் யதார்த்தவாதிகளை, தனது நடைமுறை செயற்பாடுகளால் மட்டும் தம்மோடு இணைத்து வைத்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அணியினர் ஒரு புறமும்,
அரசியல் வியாபார சந்தையில் எமது இனத்தின் அரசியல் அபிலாசைகளை கோடிக்கணக்கான பணத்திற்காக விற்றுப் பிழைத்து, விலைபோகும் சுயலாப தமிழ் அரசியல்வாதிகளோடு பணப்பெட்டிகளைப் பரிமாறியிருக்கும் எதிரணியினர் இன்னொரு புறமும்.
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகள் மட்டும் வழங்கியவர்கள் ஒருபுறம். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிற ஜனாதிபதி மறுபுறம்.
இதில் யாரை நீங்கள் ஆதரிக்கப்போகிறீர்கள் என்பது உங்களது தீர்மானம்.
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதையும் கூறாதவர்கள் ஒருபுறம். எமது கோரிக்கைகளை உள்வாங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னொரு புறம்.
நான் அரசியல் வாதி அல்ல. ஒரு மாபெரும் அரசியல் விடுதலைப் போராட்ட இயக்கத்தையே வழி நடத்திச் சென்றவன், என்னுடன் கூட இருப்பவர்களில் பலரும் அரசியல் வாதிகளல்ல. அவர்களும் அரசியல் விடுதலைப்போராளிகளே. ஆகவேதான், இன்று வரையில் நான் ஒரு அரசியல் போராளியாகவே வாழ்ந்து வருகின்றேன். எனவேதான் நான் உங்களுக்கு எப்போதுமே சரியான வழிமுறைகளையே காட்டிக்கொண்டிருக்கிறேன். எனது வழிமுறையில் இடப்பெயர்வுகளுக்கோ, இழப்புகளுக்கோ, அழிவுகளுக்கோ, துன்பங்களுக்கோ, துயரங்களுக்கோ இடமில்லை. இணக்க அரசியல் ஊடாக, உரிமைக்குக் குரலாகவும் உறவுக்குக் கரமாகவும்; செயற்பட்டு வருகின்றேன். எதையும் உருப்படியாகச் செய்யாத, அடிக்கடி கட்சி மாறுகின்ற முன்னைநாள் அமைச்சர் ராஜித அவர்கள் கட்சி தாவுவதற்கு முன்னர் என்னைப் புகழ்ந்து பேசியவர். இன்று நான் எதையும் வெளியே கதைப்பதில்லை என்று சொல்லி வருகின்றார். உண்மைதான் எனக்குச் சலசலப்புத் தேவையில்லை. பலகாரம்தான் தேவை.
அந்த வகையில் நான் அடிக்கடி ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து, எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவே கலந்துரையாடி வருகின்றேன். அந்த வேளைகளில் ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி சொல்லுவார் நீங்கள் புலிகளைவிட மோசமானவர். புலிகள் கூட என்னை இந்தளவு தொந்தரவு செய்யவில்லை என்று. நான் எப்போதும் நடைமுறைச் சாத்தியமாகவே அணுகுகின்றவன்.
அதாவது கடந்த காலத் தவறான தமிழ் அரசியல் வழிநடத்தலால் எமது மக்கள் முள்ளிவாய்க்கால் வரை செல்லவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். எமது மக்கள் முட்செடிக்குமேல் விழுந்த சேலையாகவுள்ளனர். அதனைப் பக்குவமாகவே மீட்கவேண்டும்.
மாம்பழக் கதை ……………..
எனது அரசியல் வரலாற்றில் நான் பல்வேறு ஆட்சித் தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன். எமது மக்களின் அரசியலுரிமைக்காக வாதாடியும், போராடியும் வருகின்றேன்.
13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து, அதற்கு மேலும் தேவையான அதிகாரங்களைப் பெறுவதன் மூலமே, எமது அரசியல் இலக்கை அடைய முடியும். இதுவே நடைமுறைச் சாத்தியமான வழிமுறை. அந்தவகையில் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொணட்தற்கிணங்க நாடாளுமன்றத் தொரிவுக்குழுவை அமைத்திருந்தார்.
ஆனாலும், இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதில் இணைந்துகொண்டு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவில்லை. அதேவேளை, நாடாளுமன்றத் தொரிவுக்குழுவின் ஊடாக, தமிழ் பேசும் மக்கள் தங்களது அரசியலுரிமைகளைப் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில், ஹெல உறுமய கட்சியினர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து விலகி, இன்று எதிரணி ஜனாதிபதி வேட்பாளருடன் இணைந்துள்ளார்கள். 13வது திருத்தச் சட்டத்தை, மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்துமாறு நான் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களிடம் கேட்டிருக்கிறேன். முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க அவர்களிடம் கேட்டிருந்தேன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களிடம் கேட்டேன். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் கூடக் கேட்டிருக்கிறேன். இறுதியாக இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடமும் கேட்டிருந்தேன்.
முன்னைய ஆட்சியாளர்கள் எவருமே எமது உரிமைக்குரலை கேட்கவும் இல்லை. நடைமுறைப்படுத்தவும் இல்லை. அந்த துணிச்சலும் அவர்களுக்கு இருந்ததில்லை. இன்று இறுதியாக, 13 வது திருத்தச்சட்டத்தை துணிச்சலோடு நடைமுறைப் படுத்திக்கொண்டிருப்பவர் யார்?..... நீங்களே சொல்லுங்கள்..... எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே அந்த செயல் வீரன்.
சொல்வதை செய்பவர், செய்வதை சொல்பவர். அவர் யார்?....... மகிந்த ராஜபக்ச அவர்களே.... அவரையே நான் இன்று உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்.
ஆட்சி மாற்றம் தேவை என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஆனாலும், வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி, ஏனைய மாகாணங்களை விடவும் தமிழ் பேசும் மக்களின் வட மாகாண சபைக்கே அதிகூடிய நிதியை ஜனாதிபதி அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார். அதை மக்களாகிய உங்களுக்கு இதுவரை சரிவரப்பயன்படுத்தத் தவறியதால், பெருவாரியான நிதி அரசாங்கத்தின் திறை சேரிக்கு வருட இறுதித் தினமே திரும்பிச் சென்று விட்டது. ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்பது போல, நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாட்டு என்பது போல, ஆற்றலும், அக்கறையும் இல்லாது விட்டதனால் வடக்கு மாகாண சபை இன்று குரங்கின் கையில் சிக்கிய பூமாலை போல் ஆகிவிட்டது. தமிழ் பேசும் மக்களின் வட மாகாண சபைக்கு அதிகூடிய நிதியை ஒதுக்கித் தந்த மகிந்த ராஜபக்ச அவர்களது அரசில் ஆட்சி மாற்றம் வேண்டுமா?..
அல்லது அந்த நிதியை எமது மக்களுக்காக செலவழிக்காமல், அரசாங்கத்தின் திறைசேரிக்கே திருப்பி அனுப்பி வைத்த வட மாகாண சபையில் ஆட்சி மாற்றம் வேண்டுமா?....
நீங்களே சொல்லுங்கள். ஆட்சி மாற்றம் எங்கு தேவை?... மத்திய அரசிலா?... அல்லது வட மாகாண சபை ஆட்சியிலா?... எங்கு ஆட்சி மாற்றம் தேவை?....
அன்றைய தமிழ்த் தலைமைகள் மாகாண சபையை அன்றே ஏற்றுக் கொண்டிருந்தால், அல்லது சரியாகப் பயன்படுத்தியிருந்தால், எமது மக்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்றிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது. கோடிக் கணக்கான பணத்திற்காக எமது மக்களின் வாக்குகளை விற்பவர்கள் நாங்களல்ல. லட்சங்களுக்காக இலட்சியங்களை இழப்பவர்களும் நாங்களல்ல. மெல்லெனப் பாயும் நீர் கல்லையும் ஊடுருவிச் செல்லும் என்பது எமது வழிமுறை. நானும் உணர்ச்சி பொங்க பேசியிருக்கலாம். கிடைத்த வாய்ப்புக்களை தட்டிக்கழித்து விட்டு, வீர முழக்கம் இட்டிருக்கலாம். எமது மக்களை அழியவிட்டு, இந்த நாட்டைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது குடும்பங்கள் குடியிருக்கும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி தப்பியோடியது போல் நானும் ஓடியிருக்கலாம். எமது மக்களின் அழிவுகளை வைத்து சுயலாப அரசியல் நாடகம் ஆடியிருக்கலாம். ஏன் அவ்வாறு நான் செய்யவில்லை என்பதை நீங்கள் உணர்வீரக்ள். எமது பாதையில் அழிவுகள் இல்லை. அவலங்கள் இல்லை. இடப்பெயர்வுகள் இல்லை. இதுவே எங்களது கொள்கை. அதற்காகவே நான் நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறையை இன்று வரை பின்பற்றி வருகிறேன். இன்று எதிரணியில் உள்ளவர;கள் சிங்கள மக்கள் மத்தியில் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். புலிகளை அழித்ததில் தமக்கே 75 வீதம் பங்குண்டு என்று சந்திரிகா பேசிக்கொண்டிருக்கிறார். புலிகளை பேச்சு வார்த்தை என்ற பொறிக்குள் இழுத்து, அவர்களை உடைத்து, பலவீனப்படுத்தியது நானே என்று ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார். யுத்தத்தைத் தானே முன்னின்று நடத்தி, பீரங்கிப் படையோடு நின்று வெற்றி கண்டதாக சரத்பொன்சேகா பேசிக்கொண்டிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜோர்தான் சென்றிருந்த போது,..
அந்த இறுதி யுத்த நாட்களில் தன்னிடமே பிரதி பாதுகாப்பு அமைச்சு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகவும், தானே முள்ளிவாய்க்காலில் கொத்துக்குண்டுகள் போட்டு புலிகளை அழித்ததாக எதிரணி வேட்பாளர் மைத்திரிபால அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார். புலிகளை தாமே அழித்ததாக இவர்கள் அனைவரும் போட்டி போட்டு உரிமை கோரிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால் தமிழ் பேசும் மக்களின் அழிவுகளுக்கு தாமே காரணம் என்று அவர்களாகவே சிங்கள மக்கள் மத்தியில் உரிமை கோரிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படி கூறும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை நாம் ஏன் நிராகரிக்க வேண்டும்?... ஏன் வெறுக்க வேண்டும்?...
புலிகளை அழித்தது தாமே என்று எதிரணியில் உள்ளவர்கள் எல்லோருமே போட்டி போட்டுச் சொல்கிறார்கள். தமிழ் பேசும் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதையாவது வழங்கினோம் என்று இவர்களில் யாருக்காவது சொல்ல முடிந்ததா என்று கேட்கிறேன். தமிழ் பேசும் மக்களை அழிவுகளில் இருந்து மீட்டெடுக்க ஆக்கப் பூர்வமாக செய்தேன், செய்து கொண்டிருக்கிறேன் எனறு சொல்ல முடிந்தவர் ஒருவர் மட்டுமே. அவர் யார்?... யார்?..... நீங்களே சொல்லுங்கள்.
அவர் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் மட்டுமே.
ஐக்கிய நாடுகள் சபையிலே தமிழ் மொழியில் உரையாற்றிய எங்கள் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த ஒரேயொரு ஆட்சித் தலைவர் யார்?.... சரணடைந்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களில் 12,500 பேரை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தவர் யார்?.. எஞ்சியிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் எமது கோரிக்கையை ஏற்று விடுதலை செய்வேன் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருப்பவர் யார்?... அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே.
எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம். படையினரின் பயன்பாட்டில் இருந்த கணிசமான நிலங்களில் எமது மக்களை மீள் குடியேற்றம் செய்தவரும் விவசாய நடவடிக்கைகளுக்கு வழி செய்தவரும் யார்?... அவரே ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச...
எஞ்சிய நிலங்களையும் மீட்டு அங்கு எமது மக்களை குடியேற்றுவேன் என்று எமது கோரிக்கைக்கு மதிப்பளித்து, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தவர் யார்?....
எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே.
எமது வரலாற்று வாழ்விடங்களை அழிவில் இருந்து தூக்கி நிறுத்தி, அபிவிருத்திப் பணிகளை செய்துகொண்டிருப்பவர் யார்?...
எமது கோரிக்கையினை ஏற்று வடக்கில், “தேசத்தின் மகுடம்” என்ற மாபெரும் அபிவிருத்தித் திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்துவேன் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருக்கும் மகத்தான மனிதர் யார்?...
அதுவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே.
எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறீசேன அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை.
எமது வரலாற்று வாழ்விடங்களின் அபிவிருத்தி குறித்தும் எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. இந்தியாவுடனோ அமெரிக்காவுடனோ பேசி எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்பது போல, நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஆனால் இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ தமது கானல் நீரையே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வாகக் காட்டிக்கொண்டிருக்கின்றனர்.