பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2015

மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை; சுவாமிநாதனுடன் வடக்கு முதல்வர் பேச்சு


வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கும் மீள்குடியேற்ற அமைச்சர்
டி.எம் சுவாமிநாதனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
கலந்துரையாடல்  கொழும்பிலுள்ள அமைச்சர் சுவாமிநாதனின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது , வலி.வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிளை விடுவித்து  மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடியுள்ளனர்.
 
எனவே புதிய அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வலி.வடக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 6500 ஏக்கர் காணியில் தேசிய பாதுகாப்பிற்கும் படையினருக்கு அவசியமற்ற காணிகளையும் விடுவித்து மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  முதலமைச்சர் மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
மேலும் சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள்  மற்றும் விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வரும் அரசியல் கைதிகளை விரைவில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்றும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. 
 
அரசியல் கைதிகளைப் பொறுத்த வரையில் பதிவு செய்யப்பட்ட கைதிகள் மற்றும் பதிவு செய்யப்படாத கைதிகள் என இருசாரார் உள்ளனர். அவர்களில் பதிவு செய்யப்படாது உள்ளவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பிரதிநிதிகளுக்கும், மக்களுக்கும் உள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். 
 
எனவே நீதிபதிகள் சிறைச்சாலைக்குச் சென்று குறித்த கைதிகள் தொடர்பிலான விபரங்களை திரட்டும் அதிகாரம் நீதிபதிகளுக்கு உண்டு. எனவே அவ்வாறு செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
குறித்த விடயங்களுக்கு உரிய கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கையினை எடுப்பதாக அமைச்சர் சுவாமிநாதன்  சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார். 
 
சந்திப்பில் வடக்கு முதலமைச்சருடன்  அமைச்சர்களான டெனீஸ்வரன், குருகுலராசா மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=890483831025461076#sthash.O8Sm1EZX.dpuf