பக்கங்கள்

பக்கங்கள்

6 மார்., 2015

மக்கள் கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்தவே 2012ல் தேர்தலில் போட்டியிட்டோம்: த.தே.கூ உறுப்பினர் நடராசா

நாம் எவரிடமும் கெஞ்சிக் கேட்டு பதவிகளைப் பெறவில்லை, எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக் கொடுக்காமலேயே கிழக்கு மாகாண சபையில் பதவிகளை பெற்றோம் என கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்திற்கு நேற்றய தினம் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிரிக்கப்படாத தீவில், எமது தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படாத சமஸ்டி முறையிலான தீர்வு இந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிலை ஏற்பட்டால் நாம் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படலாம் என்பதே எமது தலைவர் சம்மந்தன் ஐயாவின் கொள்கை.
இந்த மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் போராட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டது. எமது மக்கள் உயிர் உடைமைகளை இழந்து, இந்திய அரசின் அனுசரணையுடன் தோற்றுவிக்கப்பட்டதே இந்த மாகாண சபை முறைமை.
எமது மக்கள் சிந்திய இரத்தத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபையை இன்னுமொரு சமூகம் அனுபவித்து வருவதும் எம்மை அதிலிருந்து புறம் தள்ளுவதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
நாம் இந்த மாகாண சபையில் போட்டியிட்டது வெறுமனே அபிவிருத்திக்காகவோ அல்லது அரசு அமைப்பதற்காகவோ அல்ல எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீது வைத்திருக்கின்ற பற்றுதலை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2012ம் ஆண்டு தேர்தலில் நாம் போட்டியிட்டோம்.
கடந்த மஹிந்த அரசின் நெருடலுக்குள் எமது மக்களால் எமக்கு பூரண ஆதரவைத் தர முடியாமல் முடக்கப்பட்டிருந்த காலத்திலும் எமது மக்களால் நாம் தெரிவு செய்யப்பட்டோம். இவ்வாறான நிலையில் அப்போதிருந்த அரசு அவர்களது பக்கமும் தமிழர் ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்பதைக் காட்ட சூழ்ச்சி மூலம் சந்திரகாந்தனைத் போட்டியிட செய்தனர்.
ஜனநாயக விழுமியங்களைப் பேணுகின்ற அரசில், பெரும்பாண்மை அங்கத்தவர்களைப் பெற்ற கட்சியே ஆட்சியமைப்பது வழமை, ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் எந்தவொரு இனமும் தனித்து ஆட்சி அமைப்பது என்பது முடியாத விடயமே.
மத்தியில் புதிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றதுடன் கிழக்கில் ஏற்படவிருந்த ஆட்சி மாற்றத்தில் தமிழர் முதலமைச்சராக வரக்கூடாது அதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து முதலமைச்சர் ஒருவர் வருவதைத் தடுக்க வேண்டும் என்ற சூழ்ச்சியே கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் விடயத்தில் இடம்பெற்றது.
இதற்கு முக்கிய காரண கர்த்தாக்களாக சோரம் போன எமது மாகாணத்தின் எட்டப்பர்களே இருந்தார்கள். அவர்களின் சூழ்ச்சியினாலேயே நாம் ஏமாற்றப்பட்டோம். இருப்பினும் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த மாகாண சபை ஆட்சியில் இணைந்தோம்.
இருப்பினும் நாம் அவர்களிடம் எதனையும் கெஞ்சிக் கேட்கவில்லை. மிஞ்சியே எமது வாதத்தினை முன்வைத்தோம். எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக் கொடுக்காமலேயே இந்தப் பதவிகளைப் பெற்றோம். இவை நாம் விரும்பிப் பெறவில்லை காலத்தின் கட்டாயத்தால் பெறப்பட்டவையே. கிழக்கு மாகாண சபை அமர்வு தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
மூன்று மாவட்டங்களிலும் விகிதாசார முறையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் தான் நாம் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். நாம் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்காகவே இந்த பதவிகளை ஏற்றுள்ளோம். எம்மால் அவ்வாறு செய்ய முடியாது போனால் அந்த பதவிகளையும் துறக்கத் தயங்க மாட்டோம் என்றார்.
வடக்கு, கிழக்கு இணைந்திருந்தால் எமது ஆட்சி எப்போதோ நிலையான ஆட்சியாக  பரிணமித்திருக்கும்: பிரசன்னா இந்திரகுமார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என சூழ்ச்சி செய்தவர்கள் எம்மை ஆட்சியில் இருந்து துரத்த எத்தனித்தவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது நிலையானதாக இருக்காது என்ற காரணத்தினாலேயே நாம் உடன்படிக்கையின் பிரகாரம் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்திற்கு நேற்று பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் இந்த மூன்று மாதத்திற்குள் பலர் கபடத்தனமாக ஆட்சி அதிகாரத்தினைப் பெற முயற்சித்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. கிழக்கு மாகாண சபையில் எமது நடவடிக்கை புதிய பரிணாமம் பெற்றுள்ளது.
இதனை எமது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கக் கூடாது என்று நினைத்தவர்கள் மறுபடியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் மண்டியிட்டார்கள்.
அவர்கள் எங்களுடன் வந்து இணைவதாகவும் எமக்கு முதலமைச்சுப் பதவியைத் தருவதாகவும் தெரிவித்து கபட நாடகத்தினை நிகழ்த்தினார்கள். இதன் போது எமது தலைவர் சம்மந்தன் ஐயா, அவர்கள் தான் இது தொடர்பில் முடிவினை மேற்கொள்ள முடியாது. எமது மாகாண சபை உறுப்பினர்கள் பதினொரு பேரும் தான் இதனைத் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்து விட்டார்.
இதுதான் எமது தலைமையின் பண்பு. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மாகாண சபை ஆட்சியில் இருந்து துரத்த எத்தனித்தவர்களுடன் நாம் கூட்டுச் சேரும் போது அது எமக்கு நிலையானதாக இருக்காது என்பதால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
நாங்கள் அதிகாரப் பரவலாக்கத்தினைக் கேட்பவர்கள். அப்படி ஒரு கொள்கையுடன் இருக்கும் நாங்கள் இன்று ஒரு தமிழ் பேசும் சமூகத்துடன் தான் இணைந்துள்ளோம். அவர்கள் எமக்கு பல தடவைகள் துரோகங்களைச் செய்திருந்தாலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் இருப்பதால் நாம் அவர்களுடன் சேர்ந்திருக்கின்றோம்.
ஆனால் அவர்களிடம் மண்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயாரில்லை. நாங்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆனால் ஏதோவொரு வகையில் இன்று எமக்கு இந்த மாகாண சபை முறைமை கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
இந்த முறையில் வடக்கு கிழக்கை பிரித்ததன் பின்னர் ஆட்சியமைப்பது தொடர்பில் நாம் கூட்டிணைய வேண்டி இருக்கின்றது. இதனால் தான் நாம் பலரினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்திருந்தால் எமது ஆட்சி எப்போதோ நிலையான ஆட்சியாக பரிணமித்திருக்கும்.
எனவே எமது தாயகம் வடகிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பிரிவினை இல்லாமல் உள்ளக சுயாட்சி முறைமையினை ஏற்று, எமது மக்கள் தங்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என்ற பல எண்ணப்பாடுகளுடனேயே நாம் தற்போது அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றோம்.
இந்த நாட்டினைப் பிரிக்க கூடாது என்ற நோக்கமே எம்மிடமும் இருக்கின்றது. நாம் ஒற்றுமையாக செயற்படுவதற்கு எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்க வேண்டும். இந்த கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் 40 சதவீதமாக இருக்கின்றோம்.
ஆனால் இந்த மாகாணத்தில் 36 வீதமாக இருக்கின்ற சகோதர முஸ்லீம் இனத்தவர்கள் எம்மை விட அதிகமான உறுப்பினர்களை பெறுகின்றார்கள். இது எவ்வாறு நிகழ்கின்றது என்று எமது மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே எமது ஒற்றுமையும் எமது பலமும் சேரும் பட்சத்திலே தான் நாம் யாரிடமும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று தெரிவித்தார்