பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2015

கிரானைட் விசாரணை: அலுவலகத்தை காலி செய்ய சகாயத்துக்கு உத்தரவு!


கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட அரசு அலுவலகத்தை காலி செய்யுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐ.ஏ.ஏஸ். அதிகாரி சகாயத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சகாயம் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, சகாயம் குழுவினர் விசாரணை நடத்துவதற்கு வசதியாக, மதுரை பழைய ராமநாதபுரம் பூ மாலை வணிக வளாகத்தில்  அலுவலகமும் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி மதுரை சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகாரி குழுவினரின் அலுவலகம் செயல்படும் எண் 12 முதல் 14 வரையிலான   கடைகளை 15 நாளில் காலி செய்யுமாறு மதுரை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கடைக்கான நிலுவை வாடகை தொகை மற்றும் மின் கட்டணம் பாக்கியை 15 நாட்களுக்குள் கட்ட தவறினால் அலுவலகம் செயல்படும் இடத்தை காலி செய்யுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸில் அதே வளாகத்தில் செயல்படும் மேலும் பல கடைகளையும் இதே காரணத்திற்காக காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.