பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2015

போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல்: கல்வீச்சு போலீஸ் தடியடி!


குரோம்பேட்டையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களிடையே நடந்த மோதலில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். குரோம்பேட்டையில் இன்று நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது ஏராளமான தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் குழுமி இருந்தனர்.


பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாமல் வரும் 12 ஆம் தேதிக்கு மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவின் தொழிலாளர் சங்கமான அண்ணா தொழிற் சங்கத்தினருக்கும்,திமுகவின் தொமுச உள்ளிட்ட பிற கட்சி தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி கல்வீச்சு நடந்துள்ளது.
இரண்டு தரப்பாக மாறி தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மோதலில் சேதப்படுத்தப்பட்டன.நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். 

கல்வீச்சில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர்.இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.