பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2015

தடைக்கு முன்பே நிறைவேறிய தாலி அகற்றும் விழா



அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி அகற்றும் நிகழ்வு-மாட்டுக்கறி விருந்து விழா இன்று ஏப்ரல் 14 காலை 7மணிக்குத் தொடங்கியது. இந்நிகழ்வுக்கு காவல்துறை அளித்த அனுமதியை நேற்றிரவு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் ரத்து செய்ததுடன், விழாவுக்கு அனுமதியளித்து-காவல்துறை பாதுகாப்பளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு செய்ததால் பெரியார் திடலில் காலையிலேயே விழா தொடங்கிவிட்டது. 7 மணியளவில் சுமார்1000 பேர் திரண்டிருக்க, தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில் விழா ஆரம்பமானது. 21 இணையர்கள் மேடையில் வரிசையாக வந்து தாலி அகற்றுவதற்கான காரணங்களையும் விருப்பத்தையும் தெரிவித்து தாலியை அகற்றினர். 

இதில் தமிழ்நாட்டவருடன் கன்னடம், மலையாளம் பேசுவோரும் இருந்தனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து, “அரசு மேல்முறையீடு செய்துள்ளது விழாவை நிறுத்துங்கள்” என்றனர். கோர்ட் ஆர்டர் போட்டிருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள் என்று திராவிடர் கழகத்தினர் கேட்க, பதில் எதுவுமின்றி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். காலை 8.15 மணியளவில் தாலி அகற்றும் நிகழ்வு முடிவுற்றது. அதன்பின் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, அம்பேத்கர் விழா தொடங்கியது. 

அதே நேரத்தில், காலை 10 மணியளவில் தாலி அகற்றும் நிகழ்வுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் சதீஷ் அக்னிஹோத்ரி- வேணுகோபால் அடங்கிய  உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு முன்பாகவே தாலி அகற்றும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார்கள் பெரியார் தொண்டர்கள்.