பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2015

கோவை சிறையில் தனிமைச் சிறையில் கைதிகள் சித்ரவதை: வீடியோ வெளியாகி பரபரப்பு

கோவை மத்திய சிறையில் 3 கைதிகளை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ள காட்சிகள் தற்போது ‘வாட்ஸ் அப்’ மூலம் வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொட்டை தலையுடன் உள்ள கைதி ஒருவரை ஜட்டியுடன் தரையில் உட்கார வைத்து தரையில் சாப்பாடு போட்டு மிரட்டி சாப்பிட வைப்பதும், அவர் கதறி அழும்



 காட்சிகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாடி வைத்த கைதி ஒருவர் ஜட்டியுடன் படுத்து கொண்டிருக்க அவர் மீது சிறை வார்டர் தண்ணீர் ஊற்றுகிறார். அந்த கைதி நீரில் நனைந்து நடுங்கியபடி சிறைக்குள் தேங்கிய நீரை கையில் அள்ளி வெளியே ஊற்றுகிறார். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. கைதிகளை தூங்க விடாமல் லத்தியால் தட்டி எழுப்புவதும், அவர்கள் குளிப்பதும் செல்போனில் பதிவாகி உள்ளது.  

இதனிடையே, ஒரு இளம் பெண், கொலை வழக்கில் கைதான தனது கணவரை பார்க்க சென்றபோது சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் மனித உரிமை கமிஷனில் புகார் தெரிவித்திருந்தார். 

இதையொட்டி, சில மாதங்களுக்கு முன் மனித உரிமை கமிஷன் அதிகாரிகள், கைதிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர், சிறையில் துன்புறுத்தல் அதிகமாகி விட்டதாக கூறப்படுகிறது. 

சிறை அறையில் நடக்கும் விவரங்களை வார்டர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து வெளியே விட்டிருப்பதாக கூறப்படுகிறது. விதிமீறி, சிறைக்குள் மொபைல் போன் வைத்திருக்கும் கைதி ஒருவர், இக்காட்சியை படம் பிடித்து, வாட்ஸ் அப்பில், தனது உறவினர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ விவகாரம் குறித்து, தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., திரிபாதி கூறியிருப்பதாவது, சிறைக்குள் மொபைல்போனில், வீடியோ எடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணை அறிக்கைப்படி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.