பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படும


ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கில், தீர்ப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து  தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராகி வரும் பவானி சிங்கை நீக்க கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கறிஞர் இருக்கும் போது, பவானி சிங் இந்த வழக்கில் எப்படி ஆஜரானார்? என்று சரமாரி கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை ஜெயலலிதா சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா சில நாட்களுக்கு முன்னர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் பவானிசிங்கை நீக்கக்கோரும் திமுகவின் மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அப்போது, பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகனின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி லோகுர், அன்பழகனை மனுதாரராக ஏற்க மறுத்துவிட்டார்.
ஆனால், பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகனின் கோரிக்கையை ஏற்ற மற்றொரு நீதிபதி பானுமதி, அதே நேரத்தில், அன்பழகனை மனுதாரராக ஏற்றுக் கொள்ள சம்மதித்தார்.
நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.