பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2015

கோத்தாவிடம் ஆறு மணிநேரம் விசாரணை - கால அவகாசம் கோரும் கோத்தபாய


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவினரால் நேற்று ஆறு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கோத்தபாய ராஜபக்ச, மலலசேகர மாவத்தையில் உள்ள லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜரானார்.
குறித்த ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் நேற்று தனது சட்டத்தரணி சான் விஜேவர்தனவுடன் அங்கு ஆஜராகி விளக்கமளித்தார்.
கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகியதன் காரணமாக அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த முறை அவர் அங்கு ஆஜரான போது ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று அவ்வாறு இடம்பெறுவதை தடுக்க பொலிஸார் கலகத் தடுப்புப் பிரிவினரையும், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரம் ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருந்திருந்தனர். மேலதிக பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் நேற்று காலை 9.00 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு முன்னிலையில் ஆஜரான கோத்தபாய ராஜபக்ச பிற்பகல் 1.00 மணிக்கு மதிய போசனத்துக்காக சென்றதுடன் மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அங்கு ஆஜரானதுடன் மாலை வரை விசாரணைகள் தொடர்ந்தன.
ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மிஹின் லங்கா நிறுவன தலைவராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் ஒன்று தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் கடந்த வாரம் மக்கள் விடுதலை முன்னணியும் 2013ம் ஆண்டு தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் முறையிட்டிருந்தது.
இதன் படியே நேற்று அந்த ஆணைக்குழு முன்னிலையில் கோத்தபாய ராஜபக்ச சுமார் 6 மணி நேரம் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார்.
இதனிடையே கோத்தபாய ராஜபக்ச தனது முகப் புத்தகத்தில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் (நேற்று) ஆஜராவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தவார கால அட்டவணை என குறிப்பிட்டு அவர் இட்டுள்ள பதிவில் நேற்று லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன் ஆஜர் எனவும் இன்று நிதிக் குற்றப் புலனாய்வு முன்னிலையிலும், நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையிலும் ஆஜராக வேண்டும் எனவும் நாளை மறு தினம் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் கால அவகாசம் கோரும் கோத்தபாய
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கால அவகாசம் கோரியுள்ளார்.
விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு கோத்தபாயவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்றைய தினம் தம்மால் விசாரணைகளுக்கு முன்னிலையாக முடியாது என கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பிரிதொரு தினத்தில் தாம் வாக்கு மூலத்தை அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.