பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2015

புங்குடுதீவு மாணவி கொலை! மேலும் ஐவர் கைது? பொலிஸ் நிலையத்தை தாக்கிய மக்கள்

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று மாலையே இக்கைது இடம்பெற்றதாக புங்குடுதீவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் வேலணை பிரதேச சபையில் கடமையாற்றுபவர் எனவும் மற்றைய 4 பேரும் கொழும்பில் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
பிரதேச சபையில் கடமையாற்றுபவரின் வீட்டிற்கு வந்து விட்டு இன்றைய தினம் மதியம் இவர்கள் கொழும்பு செல்லவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட  கொலை சந்தேகநபர்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அவர்களை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை தாக்கு முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து பொதுமக்களுக்கு அஞ்சி சந்தேக நபர்களை யாழ்ப்பாணத்துக்கு கடல்வழியாக கொண்டுசென்றுள்ளனர்.
இது தவிர, இன்றும் மாணவியின் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும்  யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலையம் தாக்குதல்
புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட ஐவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ள நிலையில்,
அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொலிஸாரை பின்தொடர்ந்தனர். வீதிகளை முற்றுகையிட்டு ரயர்களைப் போட்டுக் கொழுத்தி ஆர்ப்பரித்தனர்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தமுடியாத பொலிஸார் சந்தேகநபர்களை ஊர்காவற்றுறைக்குக் கொண்டுசென்றனர். அதனைக் கேள்வியுற்ற பெதுமக்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டு வீதிகளையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடல்வழியாக சந்தேகநபர்களை குறிகாட்டுவானுக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர். அதனையும் கேள்வியுற்ற பொதுமக்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலின் போது பொலிஸார் ஒருவர் காயமடைந்தார் என்றும் புங்குடுதீவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.