பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2015

ஏமனில், சவுதி அரேபியாவின் அறிவிப்பை ஏற்று சண்டை நிறுத்தத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சம்மதம்



ஏமனில், சவுதி அரேபியாவின் அறிவிப்பை ஏற்று சண்டை நிறுத்தத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.


ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களையும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரையும் குறி வைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலில் 1,300–க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர். ஆனால் தொடர்ந்து சவுதி அரேபியா தனது தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் சனாவில் உள்ள முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் வீட்டை குறி வைத்து நேற்று சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியது. 

இதனை முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் உறுதி செய்துள்ளனர். 3 முறை அவரது வீட்டில் குண்டு வெடித்ததாகவும், வீட்டில் இருந்து புகை கிளம்பியதாகவும் தெரிவித்தனர். ஆனால் இந்த தாக்குதலில் அலி அப்துல்லா சலே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இதற்கிடையே மனிதநேய அடிப்படையில் 5 நாட்கள் சண்டை நிறுத்தம் செய்ய சவுதி அரேபியா முன்வந்தது. இந்த சண்டை நிறுத்தம் நாளை (செவ்வாய்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகம் நிலவி வந்தநிலையில், சண்டை நிறுத்தத்திற்கு நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.