பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2015

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம் ஜெயலலிதாவின் ஆட்சியில் முடிவுற்ற பிரபலமான திட்டம் நிறைவு


தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடக்கி வைத்தார். 
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக, ஆலந்தூரில் இருந்து முதல் மெட்ரோ ரயில்
சேவையை தொடக்கி வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது.
அத்துடன் அந்த வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் பணிமனை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2வது வழித்தடமான சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆலந்தூர் - கோயம்பேடு இடையே கட்டணம் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10ம் அதிகபட்சமாக ரூ.40ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் ஒவ்வொன்றும் 4 பெட்டிகளை கொண்டது. ஒரு ரயிலில் 1,276 பேர் வரை பயணிக்கலாம்.
காலை 6 மணி முதல் இரவு பத்து மணிவரை 192 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த மெட்ரோ ரயிலில் தடையற்ற மின்சார வசதி, ஏசி வசதி, தானியங்கி கதவுகள், அவசரகால தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு நவீனவசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களும் அனைத்து நவீனவசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சுத்தமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், கேன்டீன் வசதி, ஏடிஎம் மையங்கள், சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
முதல்முறை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் கவனிக்க வேண்டிய விடயங்கள்:
மெட்ரோ ரயிலின் கதவுகள் தானியங்கி கதவுகள் என்பதால், பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் 30-35 நொடிகள் தான் நிற்கும் என்பதாலும் தானியங்கி கதவுகள் என்பதாலும் கவனக்குறைவாக இருக்க கூடாது.
ரயிலில், 15 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே அனுமதி உண்டு.
அதுவும் 60 செ.மீ நீளம், 45 செமீ அகலம், 25 செமீ உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
மாதாந்திர சீசன் டிக்கெட் போன்ற கார்டுகளையோ அல்லது குறிப்பிட்ட பயணத்துக்கான டோக்கன் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். மேலும் மெட்ரோ ரயிலில் பயணிசீட்டில்லா பயணத்துக்கு வாய்ப்பே இல்லை.
ரயில்களின் உள்ளே புகை பிடிக்கவோ அல்லது மது அருந்தவோ கூடாது.
பயணிகளை துன்புறுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டால் சிறை மற்றும் அபராதம் உண்டு. மேலும் வளர்ப்பு பிராணிகளை அழைத்து செல்ல முடியாது.