பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2015

பிரதமர் வேட்பாளாராக மஹிந்த போட்டி. பி.பி.சி


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் எந்தக் கட்சி அல்லது கூட்டணியின் சார்பில் அவர் போட்டியிடுவார் என்பது எதிர்வரும் செவ்வாய்கிழமைதான் முடிவாகும் என அவரது அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்த குமார் வெல்கம பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மஹிந்த தற்போது அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அவர் நிறுத்தப்படமாட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ணவும் மஹிந்த ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சி போட்டியிட வாய்ப்பளிக்காது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், மஹிந்த ராஜபக்ச எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்பது முக்கியமல்ல என்றும், அவர் போட்டியிட வேண்டும் எனபதே மக்களின் விருப்பம் என குமார் வெல்கம கூறுகிறார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யார் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.