பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2015

பல இலட்சம் பெறுமதியான பணம், பொருட்களுடன் திருட்டு கும்பல் கைது ; மானிப்பாய் பொலிஸார் அதிரடி


பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்துடன் திருட்டுக்கும்பல் ஒன்றினை இன்று காலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 
இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகேஸ் தெரிவிக்கையில்,
 
கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வரும்போது பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகினர். இதனையடுத்து 11 பேர் சம்பவத்துடன்  தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
அவர்களது வாக்குமூலத்தினடிப்படையில் பலர் தேடப்பட்டு வருகின்றனர். அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் நேற்று வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர் திருட்டுக்கும்பலுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 
அத்துடன்  இவரது தொலைபேசி அழைப்புக்களின் பிரகாரம் இடம்பெற்ற விசாரணையிலும் திருட்டுக் கும்பலுடன் தொடர்பு உள்ளவர் என்பது நிருபணமாகியது. அதனடிப்படையில் கிளிநொச்சி சாந்தபுரம் மற்றும்  உருத்திரபுரத்தில் 7 பேரடங்கிய திருட்டுக் கும்பல் ஒன்றினை இன்று அதிகாலை கைது செய்துள்ளோம். 
 
அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்-  04, கமரா -03, சங்கிலி -01, காப்பு -01 சோடி, ஐ.பாட் -02 தொலைபேசிகள் -04, வாள் -01 மற்றும்  6இலட்சத்து 92 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.
 
யாழ்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டுப் போயிருந்த பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டவையாகும். மேலும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்றும்  விசாரணைகள் தொடர்கின்றது. 
 
இவ்வாறு கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர், கட்டுடையை சேர்ந்த 03 பேரும், சங்கானையைச் சேர்ந்த 02 பேரும் மானிப்பாயை சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர். 

 
 
மேலும் பலர் குறித்த திருட்டுக் கும்பலுடன்  தொடர்புடையவர்கள் என்றும்  விசாரணையில் தெரியவருகின்றது.  அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர். இது தொடர்பிலான விசாரணைகள்  தொடர்ந்தும் நடைபெறும். 

 
குறித்த நபர்கள் 7பேரும்  இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர் என்றும்  அவர் மேலும்  தெரிவித்தார்
-