பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2015

பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது!- கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்


கிழக்கு மாகாண சபையில் 2008 ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பிள்ளையான் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதைப் போன்ற நிதி வீண்விரயம் தமது ஆட்சிக்காலத்தில் இடம்பெறமாட்டாதென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அக்காலப்பகுதியில் இடம்பெற்ற நிதி வீண்விரயம் குறித்த விடயங்கள் மிக விரைவில் அம்பலத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் தற்போதைய ஆட்சியின் பாரபட்சமற்ற வெளிப்படை தன்மைகொண்ட ஒதுக்கீடுகளை ஒப்பிட்டு நோக்கும் சந்தர்ப்பம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
மாகாண சபையின் ஜுன் மாதத்திற்கான அமர்வில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலபத்தி தலைமையில் சபை நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதன்போது நிதியொதுக்கீட்டுச் சமர்சீர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இரா.துரைரட்ணம் சுட்டிக்காடினார். இதேபோன்று நிதியொதுக்கீடுகளில் பாரபட்சம் மற்றும் புறக்கணிப்பு இடம்பெறுவதாக உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேலும் பேசுகையில்--2008 ஆம் ஆண்டு வெளிநாடு செல்லவிரும்பிய இளைஞர்களுக்கு கொரிய நாட்டு மொழி கற்பிப்பதற்காக இருபது இலட்சம் ரூபா முற்பணமாகப் பெறப்பட்டபோதிலும் பாடநெறி பூர்த்தி செய்யப்படாது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று 2009 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட முதலமைச்சர்கள் மாநாட்டிற்காக 51 இலட்சத்து 25 ஆயிரத்து 384 இந்த மாகாண சபை நிதியிலிருந்து செலவிடப்பட்டுள்ளது
இது எமது மாகாண மக்களுக்கான நிதியாகும். வீண்விரயம் செய்து எமது மக்களின் வயிற்றில் அடிக்க அனுமதிக்கமாட்டோம். இதேபோன்று எம்மிடம் இருக்கின்ற நிதி வீண்விரயப் பட்டியலை வெளியிடுவோம். அப்போது உங்களது முகத்தில் கரிபூசப்படும். எனவே முதலமைச்சராக இருந்த நீங்கள் இங்கு மிகுந்த பொறுப்புணர்வுடன் பேசவேண்டும்.
இந்த மாகாண - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சியமைத்திருப்பது வரலாறாகும். இதில் ஐதேக மற்றும் ஐமசுகூ போன்ற கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்த பிள்ளையான் உள்ளிட்டவர்கள் மேற்கொள்ளும் சதி முயற்சிகள் ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்றார்.
முதலமைச்சர் பேசும்போது முன்னாள் அமைச்சர்களான விமலவீர திசாநாயக்க மற்றும் எம்எஸ் உதுமாலெப்பை உள்ளிட்டவர்கள் குறுக்கீடு செய்யதையடுத்து சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.