பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2015

குறுக்கு விசாரணைக்கு என்னால் பதிலளிக்க முடியாது; நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு


உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணையில் ஒரு வினாவிற்குக்
கூட என்னால் பதிலளிக்க முடியாது என நீதிமன்றிற்கு நேரடியாக தெரிவித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது
 
கடந்த 29.04.2012 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ்ஸை ஆதாரம்காட்டி 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கடத்தல்கள், கொலைகள், கப்பம் பெற்றமையுடன் ஈ.பி.டி.பியினர் தொடர்புபட்டுள்ளனர் என்று  உதயன் பத்திரிகையில் செய்தி  பிரசுரிக்கப்பட்டது.
 
குறித்த செய்தியினால் தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என தெரிவித்து யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வழக்குத்தொடுத்திருந்தார்.
 
வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு திகதியிடப்பட்டு டக்ளஸ் தேவானந்தாவிடம் சாட்சியப்பதிவுகள் பெறப்பட்டன.
 
சாட்சியப்பதிவுகள் முடிந்தவுடன்  உதயன் பத்திரிகை நிறுவனம்  சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் குறுக்கு விசாரணை செய்ய மன்றிடம் அனுமதி கோரினார்.
 
அதன்போது உடல்நலக்குறைவினால் தொடர்ந்தும் தன்னால் குறுக்கு விசாரணைக்கு பதிலளிக்க முடியாது என்று டக்ளஸ் தேவானந்தா தனது சட்டத்தரணி ஊடாகவும் நேரடியாகவும்  மன்றில் தெரிவித்தார்.
 
அதனை ஆட்சேபித்த சட்டத்தரணி சுமந்திரன், சாட்சியப்பதிவுகள் இடம்பெற்ற நிலையில் குறுக்கு விசாரணை செய்யாது விட்டால் சாடசியத்தில் கூறப்பட்ட தவறான விடயங்களுக்கு வழக்காளி சட்ட ஆலோசனை பெறமுடியும்  என்றும்  இதனால் தனக்கும் ,  பத்திரிகை நிறுவனத்திற்கும்  பாதிப்பு ஏற்படும் என மன்றில் சுட்டிக்காட்டினார்.
 
எனவே குறுக்கு விசாரணையின் இரண்டு வினாக்களுக்காவது டக்ளஸ் தேவானந்தா பதிலளிக்க வேண்டும் என்றும் மன்றிடம் கோரினார். அதன்போதும்  தனக்கு பதில் கூறமுடியாது என்ற பதிலையே டக்ளஸ் தேவானந்தா நேரடியாக முன்வைத்தார். 
 
அத்துடன்  குறுக்கு விசாரணை ஆரம்பித்து விட்டது என்பதற்காவது ஒரு வினாவிற்காவது பதில் சொல்லட்டும் தொடர்ந்து குறுக்கு விசாரணையை அடுத்த வழக்கு திகதியில் தொடரலாம் என்றும் சட்டத்தரணி சுமந்திரன்  கேட்டிருந்தார். 
 
அதன்போது ஒருவினாவிற்கேனும்  என்னால் பதில் கூறமுடியாது என டக்ளஸ் தேவானந்தா நேரடியாக மன்றில் கூறினார். 
 
அதனையடுத்து குறித்த சாட்சியாளருக்கு உடல் நலக்குறைவா இல்லையா என்றுபார்ப்பதற்கு தற்போது நீதிமன்றத்தினால் முடியாது என்றும்  குறித்த வழக்கின் குறுக்கு விசாரணையினை அடுத்த திகதிக்கு ஒத்தி வைப்பதாகவும்  நீதிபதி  கஜநிதிபாலன்  மன்றில் உத்திரவிட்டார். 
 
டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து சாட்சியமளிக்கையில், 
 
ஈ.பி.டி.பி தொடர்பில் ஒன்றல்ல பல செய்திகள் உதயன் பத்திரிகையில்  வெளிவந்துள்ளது.  இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுக்கமுடியாது நீதிகேட்டு மன்றுக்கு வந்துள்ளேன். 
 
யாழில் சப்ரா என்ற நிதி நிறுவனம் மக்களின் உழைப்பினையும் சேமிப்பாக முதலீடு செய்து முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தது. அதனால் சப்ரா என்ற நிதிநிறுவனம் நிறுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் தான் உதயன் என்ற பத்திரிகை நிறுவனம்  ஆரம்பிக்கப்பட்டது என்றார்.
 
அதன்போது குறிக்கிட்ட சட்டத்தரணி சுமந்திரன் , சாட்சியான டக்ளஸ் தேவானந்தாவின்  கருத்துக்கு தான் ஆட்சேபம் தெரிவிப்பதாக தெரிவித்தார். அத்துடன்  கேட்கப்பட்ட வினாவினை விட தனது கருத்தினை முன்வைக்க சாட்சி நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகின்றார் என மன்றில் ஆட்சேபித்தார். 
 
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கேட்கப்பட்ட கேள்விக்கு மாத்திரம் பதிலளிக்குமாறும்  அதுவே சாட்சியின் கருத்தை பிரதிபலிக்கும்  என்றும் வேறு பதில்கள் எனின் கருத்தினை சரியாக விளங்கிக் கொள்ள முடியாது என்றும் சாட்சியான டக்ளஸிற்கு ஆலோசனை வழங்கினார்.
 
தொடர்ந்தும்  சாட்சியமளித்த டக்ளஸ் தேவானந்தா,  பல செய்திகள் என்னைப் பாதித்துள்ளன. அதில் ஒன்று நாடாளுமன்றத்தில் கூறாத விடயங்களை கூறியதாக பத்திரிகையில் பிரசுரித்தது என்று கூறியபோது,  குறுக்கிட்ட சட்டத்தரணி சுமந்திரன்  சாட்சி மீண்டும் நீதிமன்றத்தினை தனது தேவைக்கு தவறாக பயன்படுத்துகின்றார் என தனது ஆட்சேபத்தினை தெரிவித்தார். 
 
மீண்டும் தொடர்ந்த டக்ளஸ் தேவானந்தா, என்மேல் குறித்த பத்திரிகை உள்நோக்கத்துடன்  செயற்படுகின்றது. பொய்யான தகவல்களை என்மேல் சுமத்துகின்றது. 
 
உதயன் பத்திரிகை செய்தியில் பிரசுரித்தமையினைப் போல அன்றைய அமெரிக்க தூதுவர் ஆதாரம் உள்ளது என குறிப்பிட்டு இருக்கவில்லை. குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமும்  இல்லை. 
 
நான் கடந்த 1974 ஆம் ஆண்டு எனது 18 வயதில் இருந்து சமூக சேவையினை செய்து வருகின்றேன். என்னை சமூக சேவைக்கு வர எனது குடும்ப பின்னணி சமுதாய அனுபவமும் ஆகும்.
 
கடந்த தேர்தல்களில் நான் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து வடக்கு -கிழக்கு மற்றும்  நாடளாவிய ரீதியிலும் மக்களுக்கு சேவை செய்தேன் .
 
குறித்த 2006 தொடக்கம்  2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் கொழும்பில் இருந்தேன். ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்வேன் .அப்போது கெடுபிடி காலம். யாழ்ப்பாணத்தில் பல கடத்தல்கள் ,  கொலைகள்  இடம்பெற்றன. 
 
அந்தநேரத்தில் நான் மக்கள் மத்தியில் பிரபல்யமானவனாகவும்  வாக்குகள்  அதிகரிப்பதனையும்  பொறுக்க முடியாத சிலர் என்மேல் பழி சுமத்தியுள்ளனர். உதயன் பத்திரிகை யாழ்.மாவட்டம், வடக்கு மாகாணம்,  சர்வதேசம்  என உலகளாவிய ரீதியில் பிரபல்யமானது. 
 
எனவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் பத்திரிகை செய்தியாக பிரசுரம் ஆகியவுடன் ஆதரவாளர்கள் ,  சர்வதேச சமூகத்திலும் எனக்கு அவப்பெயர் ஏற்பட்டது. இதனால் பல தடவைகள் பத்திரிகை நிறுவன ஆசிரியருக்கு எனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பினேன். பதில் ஏதும் கிடைக்கவில்லை.
 
குறித்த செய்தியால் எனது கட்சிபோட்டியிட்ட வடக்கு மாகாண சபையின்  தேர்தலில் எமது கட்சிக்கு பின்னடைவே ஏற்பட்டது. எனவே இவ்வாறான காரணங்களால் நான் மிகவும் மன உழைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். 
 
எனது பெயர்களங்கம் ஏற்படுத்தப்பட்டமையால் நான் குறிப்பிட்ட நஷ்டஈட்டு தொகையை எனக்கு வழங்க வேண்டும். அத்துடன் தவறான செய்தியை பிரசுரித்ததாக குறித்த பத்திரிகை பிரசுரிக்க வேண்டும் என்றும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார். 
 
முதல் விசாரணை முடிவுற்ற நிலையில் குறுக்கு விசாரணைக்கு பதலளிக்க முடியாது என கூறப்பட்ட வேளை கொலைக்குற்றஞ்சாட்டப்பட்ட கமலேந்திரன்  ஈ.பி.டி.பியா?  இல்லையா?  என்ற வினாவினை சட்டத்தரணி சுமந்திரன்  டக்ளஸிடம்  கேட்டிருந்தார். 
 
எனினும் அதற்கு எதுவிதமான பதிலும் டக்ளஸ் வழங்கவில்லை.மௌனமானவே சாட்சிக் கூட்டில் இருந்து இறங்கிச் சென்றார். 
 
இதேவேளை, குறுக்கு விசாரணைக்காக வழக்கை செப்ரெம்பர் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மாவட்ட நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=867754148916769773#sthash.jvsWTKI2.dpuf