பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2015

கிரீஸ் வங்கிகள் மூடல் – ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு

கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிரேக்கத்திற்கான அவசர கால நிதியை நீட்டிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவை தொடர்ந்து கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டன.
இன்றைய தொடக்க வணிகத்தில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் கிட்டதட்ட 4 சதவித அளவுக்கு வீழ்ச்சி கண்டன. எனினும் சிறிது நேரம் கழித்து சிறு முன்னேற்றம் இருந்தது. முன்னதாக, ஆசிய பங்குச் சந்தைகளும் கணிசமாக வீழ்ச்சிகண்டன.
இந்த வாரம் முழுவதும் கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பணம் எடுக்கும் இயந்திரங்களும் இன்று நண்பகல் வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்த பிறகும் ஒரு நாளைக்கு 60 யுரோக்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளிநாட்டு வங்கி அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது.
ஒரு தொலைக்காட்சி உரையில் பேசிய கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் அனைவரும் அமைதி காக்கும்படி கூறியுள்ளார்.
அங்கு மக்களுக்கு மத்தியில் எந்த பதற்றமும் தென்படவில்லை என்றும் அனைவரும் தங்களின் பணிகளை எப்பொழுதும் போல் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அங்கிருந்து நிலைமைகளை கண்காணித்த சர்வதேச ஊடக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.