பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூலை, 2015

வேட்பாளர்கள் தேர்வு அன்ரனி ஜெயநாதன் சம்பந்தனுக்கு கடிதம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கல்வித் தகைமை உடையவர்களை நேர்மையான முறையில் தெரிவு செய்யுமாறு வட மாகாண சபையின் பிரதி
அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த கடிதத்தினை அவர் வழங்கியுள்ளார்.
குறித்த கடிதத்தில், கடந்த காலங்களில் வேட்பாளர் நியமனம் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், பொருத்தமற்ற முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது எனவும், இந்த முறை சிறந்த கல்வி தகைமையுடைய பொருத்தமான வேட்பாளர்களை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் தெரிவு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் வேட்பாளர் நியமனக் குழுவில் வேட்பாளர்களாக செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், விநோநோதாரலிங்கம் ஆகியோரை நியமித்த விந்தையான செயல்கள் வேண்டாம்.
தொடர்ச்சியாக மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களை நான்காவது முறை வேட்பாளர் நியமனம் வழங்குவது நீதியற்றது.
மூன்றாவது முறை மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கும், குடும்ப ஆட்சியையும் ஏற்க மறுத்தவர்கள் நாங்கள்.
19வது திருத்தத்தில் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபயாக போட்டியிட முடியாது என்பதனை மகிழ்ச்சியோடு ஆதரவளித்த நாங்கள் கட்சியில் நான்காவது முறை வேட்பாளர் நியமனம் வழங்குவது ஜனநாயக கொலையாகும்.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர்கள் மாகாண சபை முடியும் காலம் வரை வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட அனுமதி வழங்க கூடாது.
தவிர்க்க முடியாத தேவை இருப்பின் மாகாண சபை உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்த பின்னர் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் மனைவி மற்றும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இலங்கையில் வசிப்பவர்களுக்கு நிச்சயமாக வேட்பாளர் நியமனம் வழங்க கூடாது.
வெளிநாட்டுப் பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கும், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கக் கூடாது.
வேட்பாளர் நியமனம் வழங்கும் போது பரந்துபட்ட முறையில் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட வேண்டும்.
வட, கிழக்கில் பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
வட, கிழக்கில் இளைஞர்கள் ஒருவருக்காவது வேட்பாளர் நியமனம் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு தேர்தல் மாவட்டத்திற்கு வேறு மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படக்கூடாது. அந்த மாவட்டத்தில் வாக்காளராகவும், நிரந்தரமாக வசிப்பவரையே வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.
முன்பு தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் வேட்பாளர்களாக்கும் தவறான கலாசாரம் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வேட்பாளர் நியமனத்தில் அதிக சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென்றும் அவர் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.