பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2015

அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி: இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் கடந்த 29ம் திகதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலியா 136 ஓட்டங்களும், இங்கிலாந்து 281 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் 145 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலியா 2வது தொடங்கியது. இதிலும் திணறிய அவுஸ்திரேலிய அணி 281 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வார்னர் (77), நெவில் (59), ஸ்டார்க் (58) ஆகியோர் அரைசதம் அடித்து அணிக்கு ஓரளவு உதவினர்.
2 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்ட ஸ்டீவன் பின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார்.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 121 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு அணித்தலைவர் அலஸ்டயர் குக் 7 ஓட்டங்களிலும், ஆடம் லைத் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
இருப்பினும் இயான் பெல்லும் (65), ஜோ ரூட்டும் (38) இணைந்து அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
வெற்றியையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் வருகிற 6ம் திகதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.