பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

752 கூட்டுறவுப் பணியாளர் வடக்கில் நிரந்தர நியமனம்

வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சின் 100 நாள் வேலைத் திட்டத்தில் 752 கூட்டுறவுப் பணியாளர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர் என்று வடமாகாண
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பதில் செயலாளரும் யாழ்.மாநகராட்சி மன்றத்தின் ஆணையாளருமான பொ.வாகீசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வேலைத்திட்டத்தில் வடக்கில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த பல வருடங்களாக நிரந்தர நியமனம் இன்றித் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றிய இவர்கள் அலுவலகங்களுக்கான பதவி நிர்ணயங்களுடன் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். 
வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களின் கூட்டுறவு நிறுவனங்களில் இருந்தும் நிரந்தர நியமனம் வழங்கப்படாத கூட்டுறவுப் பணியாளர்களின் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிரந்தர நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் ஆணைக்குழுவால் பரிசீலிக்கப்பட்டன. பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் நிரந்தரமாக்கப்பட்ட சம்பந்தப்பட்ட கூட்டுறவு பணியாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் 413 பேரும், வவுனியா மாவட்டத்தில் 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 223 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 106 பேருமாக மொத்தம் 752 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட வர்களில் விற்பனையாளர்கள், களஞ்சிய முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள், லிகிதர் கள், கணக்காளர்கள், வர்த்தக முகா மையாளர்கள் உட்பட அனைத்து வகையான பதவி நிர்ணயங்களுக்குமென நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் தொடர்ந்தும் சங்கங்களில் தற்காலிகப் பணியாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த வண்ணம் உள்ளன.
அந்த விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்-என்றார்.