பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2015

வவுனியாவிலுள்ள நாடோடிகளுக்கு வீடமைப்புத் திட்டம்


பிறப்பிலிருந்து தமக்கான வீடொன்று இல்லாத நிலையில், வட மாகாண மாகாணத்தில் குடிசைகளில் வாழ்ந்து வரும் அனைத்து நாடோடி குடும்பங்களுக்கும் இந்திய நிதியுதவியின் கீழ் நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் ஆர்.தனபால தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளை வழங்கும் இந்தியாவின் உதவித்திட்டத்தின் மூன்றாம் கட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மீள்குடியேறியுள்ளவர்களுக்காக 5000 நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, வவுனியா நொச்சிக்குளம் பகுதியில் தற்போது வாழ்ந்து வருகின்ற 46 நாடோடி குடும்பங்களுக்காக வீடுகளும் இந்த திட்டத்தின் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஆர்.தனபால குறிப்பிட்டுள்ளார்.
யுத்த சூழ்நிலையினால் 1985ஆம் ஆண்டு முதல் இந்த நாடோடி குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தமது உயிரை பாதுகாத்துக் கொண்டதுடன்,
யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் 2012ஆம் ஆண்டு மீண்டும் நொச்சிக்குளம் பகுதிக்கு வருகைத் தந்து தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
இந்த வீடமைப்பு திட்டம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா மாவட்ட கிளையின் முழுமையான கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வீடமைப்பு திட்டத்தை நாடோடி குடும்பங்களுக்கு வழங்குவதற்காக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவின் ஆலோசனை மற்றும் தலையீட்டின் கீழ் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் ஆர்.தனபாலவின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.