பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2015

பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை : தென் கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு



 வடகொரியா, தென் கொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் அங்கு படைகள் இல்லாத பிரதேசத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் தென்கொரிய வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். அதையடுத்து, தென்கொரியா, வட கொரியாவுக்கு எதிராக கொரிய எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் நடத்தியது. இது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தென்கொரியாவை குறிவைத்து வடகொரியா பீரங்கி தாக்குதல் நடத்த, தென்கொரியாவும் பதிலடி கொடுத்தது. 

இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இரு தரப்பும் சமரச பேச்சு நடத்தினர். அதில் அப்போது உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பினரும் மீண்டும் பேச்சு நடத்தவும் அப்போது முடிவானது.

இந்த நிலையில், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வட கொரியா அழைப்பு விடுத்தது. அதை ஏற்று, தென் கொரியா சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த சமரச பேச்சு வரும் 26-ந் தேதி பான்முஞ்சோம் சண்டை நிறுத்த கிராமத்தில் நடக்கிறது. இந்த பேச்சு வார்த்தையில் பெரிதான அளவுக்கு எந்த முடிவும் எட்டப்படாது என்றபோதும், பதற்றத்தைத் தணிக்க பெரிதும் உதவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.