பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2015

தமிழ் மக்கள் அழுத கண்ணீர் மகிந்தவை நிச்சயம் நோகடிக்கும்


ஆட்சிக் காலத்தில் தவறிழைத்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ­ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மகிந்த ராஜபக்ச ­ ஆட்சிக் காலத்தில் தவறிழைத்தேன் என்று கூறினாராயினும் எங்கே? எப்போது? எத்தகைய தவறிழைத்தேன் என்பதை அவர் கூறவில்லை.
இருந்தும் அவரின் மனத்தை ஏதோவொரு சம்பவம் வாட்டுகிறது என்பது மட்டும் உண்மை.
வன்னிப் பெருநிலப்பரப்பில் போர் நடந்த வேளை இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் போரில் சிக்கித் தவித்த தமிழ் மக்களைக் காப்பாற்றுகின்ற தார்மீகக் கடமை அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவுக்கு இருந்தது.
எனினும் வன்னிப் போரின் போது மகிந்த ராஜபக்ச ­ தான் பெளத்த சிங்கள மக்களின் ஜனாதிபதியாகவே நடந்து கொண்டார்.


விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் போது யுத்தப் பிரதேசத்துக்குள் சிக்கிய பொதுமக்களைக் காப்பாற்றுகின்ற பணியைச் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு மகிந்த ராஜபக்­சவுக்கு இருந்தது. எனினும் அவர் தமிழ் மக்களையும் பரம எதிரிகளாகவே கருதினார்.
இதன் காரணமாகத்தான் போர் நடந்த வன்னி மண்ணில் இருந்து அனைத்தையும் இழந்து வெளியேறிய தமிழ் மக்களை முட்கம்பி வேலிக்குள் அடக்குகின்ற மிகப்பெரும் கொடுஞ் செயலை மகிந்த ராஜபக்ச ­ செய்தார்.
இதற்கு மேலாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குழந்தைகளின் அவல மரணங்கள் சாதாரணமானவையன்று. வன்னிப்போரில் மகிந்த ராஜபக்ச ­ வெற்றி பெற்றிருந்தாலும் வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த உயிரிழப்புகள் நிச்சயம் மகிந்த ராஜபக்ச­வின் நிம்மதியைக் குழப்பும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதன் காரணமாகத்தான் ஆட்சிக்காலத்தில் தவறிழைத்தேன் என்று மகிந்த ராஜபக்ச­ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சியில் எல்லாம் சரியாக நடந்தது என்று ஆரம்பத்தில் கூறிவந்த மகிந்த ராஜபக்ச­ இப்போது தன்னை ஆற்றுப்படுத்த முடியாமல் தவிக்கிறார் என்பது தெரிகிறது. அதனால், தானிழைத்த தவறுகளை வெளிப்படுத்த வேண்டும் என அவர் நினைத்திருக்கலாம்.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
என்ற வள்ளுவரின் வாக்கு பொய்யானதன்று.
தன் நெஞ்சு தன்னைச் சுடுவதென்பது மிகப்பெரிய தண்டனை. இந்தத் தண்டனை பற்றி வள்ளுவர் மிகத் தெரிவாகக் கூறியுள்ளார்.
இன்றுநாம் செய்யும் செயல் சரி எனப் படலாம். ஆனால் நாளை, நாளை மறுதினம் அந்தச் செயல் சரியானதாக, ஏற்புடையதாக இருக்குமா என்பதை ஆராய்ந்து அறிந்து செயலில் ஈடுபடுபவனே உண்மையான ஆட்சியாளனாக இருக்க முடியும்.
எனினும் அத்தகையதொரு ஆராயும் தன்மை மகிந்த ராஜபக்சவிடம் அறவேயிருக்கவில்லை.
புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே ஒரே இலக்காக அவருக்கு இருந்தது.
அதன் விளைவு குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்கள், பெற்றோர்களைப் பறிகொடுத்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் என்ற மிகப்பெரியதொரு துன்பச்சுமை இந்த மண்ணைப் பாரமாக்குகிறது.
உலகமும் நாடும் எத்துணை உதவிகளைச் செய்தாலும் உயிரிழப்புக்களை ஈடுசெய்ய முடியுமா என்ன?
ஆக, வன்னிப் போரில் உயிரிழந்த மனிதங்களின் அவலநிலை மகிந்த ராஜபக்ச­வை மறைமுகமாக வருத்துவதன் வெளிப்பாடுதான், எனது ஆட்சியில் தவறிழைத்தேன் என்ற வார்த்தையாகும்.
இந்த வார்த்தை வெளிப்படுவதற்காக ஜனாதிபதியாக இருக்க வேண்டியவரை பாராளுமன்ற உறுப்பினராக்கிய சக்தி இருக்கிறதே அது நிச்சயம் ஒவ்வொரு விடயத்துக்கும் தக்க தண்டனை வழங்கியே தீரும்.